இனி மதுக்கடைகயை திறக்கவிட மாட்டோம்.. தமிழிசை !

தமிழகத்தில் புதிதாக ஒரு மதுக்கடையை கூட திறக்கவிட மாட்டோம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். இது குறித்து அவர் சென்னையில் அளித்த பேட்டியில், " காமராஜர் பிறந்த நாள் விழாவை கொண்டாட, பா.ஜ.,வுக்கு தகுதி இருக்கிறதா என, காங்கிரசார் கேட்கின்றனர்.
நாட்டுக்காக தன்னலமற்று உழைத்த தலைவர்களை போற்றும் கட்சி, பா.ஜ., என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ராகுலின் தமிழக வருகை, எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. 'புதிய மதுக்கொள்கையை கொண்டு வருவோம்' என ராகுல் பேசியுள்ளார்.

அப்படியெனில், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், அப்படிப்பட்ட மதுக் கொள்கையை, ஏன் கொண்டு வரவில்லை? 'மதுவிலக்கு வேண்டும்' என, போராட்டங்கள் நடக்கும் போது, 'எலைட்' மது கடைகளை திறக்கப் போவதாக, அரசு அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது.

இனி, தமிழகத்தில், புதிதாக எந்த ஒரு மதுக்கடையையும் திறக்கவிட மாட்டோம். சினிமாக்களில், மது குடிக்கும் காட்சிகளையும், புகை பிடிக்கும் காட்சிகளையும் தடுக்க வேண்டும்.ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றபின், ஆட்சியில் வேகமும் இல்லை; மாற்றமும் இல்லை.

தண்ணீர் பற்றாக்குறை பயமுறுத்தி வருகிறது. இதையெல்லாம் தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக பா.ஜ.,வில், 45 லட்சம் பேர் உறுப்பினராக சேர்ந்துள்ளனர்.

அவர்களை நேரடியாக சந்திக்கும், 'மகா மக்கள் சந்திப்பு இயக்கம்' அடுத்த மாதம் துவங்குகிறது. இதற்கான கேந்திர பொறுப்பாளர் கூட்டம், ஆக., 6ம் தேதி, மதுரையில் நடக்கிறது. இதில், கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்கிறார்.

சட்டசபை தேர்தலில், பா.ஜ., தனித்து போட்டியிடும் சூழ்நிலை ஏற்பட்டால், அதற்கு தயாராக உள்ளோம். விரைவில், மத்திய அமைச்சர்கள் பலர், தமிழகம் வந்து, ஆக்கப்பூர்வ பணிகளை செய்வர்" என்று கூறினார்.
Tags:
Privacy and cookie settings