பேஸ்புக் செய்த மேஜிக்: குட்டிப் பையனின் வீட்டில் குவிந்த புத்தகங்கள்!

வீண் அரட்டை அடிப்பவர்கள் ஒன்று கூடும் இடம், என்று சொல்லப்படும் பேஸ்புக்தான், பல நல்ல உள்ளங்கள் கூடும் இடமாகவும் இருக்கிறது. அப்படி பல நல்ல உள்ளங்கள் ஒரு குட்டிப் பையனுக்காக ஒன்றிணைந்த கதைதான் இது.
 
சில தினங்களுக்கு முன், அமெரிக்க தபால் சேவை மையத்தின் ஊழியரான ரான் லிஞ்ச், உதா மாநிலத்தில் தபால்களை டெலிவரி செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவரை ஒரு குட்டிப்பையன் வழிமறித்தான். தன்னை மேத்யூ ப்ளோர்ஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த சிறுவன், “எனக்கு படிப்பதென்றால் மிகவும் பிடிக்கும்.

ஆனால் என்னிடம் புத்தகங்களே இல்லை. உங்களிடம் கூடுதலாக ஏதாவது கடிதங்கள் இருந்தால் தருகிறீர்களா?” என்று அப்பாவித்தனமாக கேட்டான்.

அவனது வெகுளித்தனமான பேச்சினாலும், படிக்கும் ஆர்வத்தாலும் கவரப்பட்ட ரான், தனது பேஸ்புக் பக்கத்தில், குட்டி மேத்யூவின் கதையைச் சொல்லி ‘அவனுக்கு உதவுங்கள்’ என்று தன் நண்பர்களிடம் கேட்டிருந்தார்.

அவ்வளவுதான். பல்லாயிரக்கணக்கானோர் அந்த பதிவை ஷேர் செய்ய, அந்த பதிவு காட்டுத்தீயாக பரவியது.

ஒரே நாளில் பேஸ்புக்கும் ரான் லிஞ்சும் சேர்ந்து செய்த மேஜிக்கால், பரிசாக வரும் பெரிய பெரிய புத்தகங்களை வீட்டில் வைக்க முடியாமல் குட்டி மேத்யூ திணறி வருகிறான்.
Tags:
Privacy and cookie settings