ஜேர்மனி நாட்டில் சிறுமி ஒருவர் ஆற்றில் நீந்திக்கொண்டிருந்த வேளையில் தங்க கட்டி ஒன்று கிடைத்ததை தொடர்ந்து அதனை பொலிசாரிடம் ஒப்படைத்து பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
ஜேர்மனியில் உள்ள பவேரியா நகரை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், கடந்த வெள்ளிக்கிழமை அன்று அப்பகுதியில் உள்ள Konigssee என்ற ஆற்றில் நீந்த சென்றுள்ளார்.
சில மீற்றர்கள் தொலைவில் நீந்திக்கொண்டிருந்த அந்த சிறுமி ஆற்றில் மூழ்கியபோது சுமார் 6.5 அடி ஆழத்தில் ஏதோ பொருள் ஒன்று மின்னுவதை கண்டுள்ளார்.
அதனை எடுத்துக்கொண்டு கரைக்கு வந்து பார்த்தபோது அது சுத்தமான ஒரு தங்க கட்டி என அறிந்து அதனை நேராக பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
தங்க கட்டியை நேர்மையாக பொலிசாரிடம் ஒப்படைத்த அந்த சிறுமியை பொலிசார் பாராட்டினர்.
பின்னர், இது குறித்து கடந்த புதன்கிழமை அன்று பொலிசார் தகவல் ஒன்றை வெளியிட்டனர்.
அதில், 500 கிராம் எடையுள்ள அந்த தங்க கட்டியின் மதிப்பு 16 ஆயிரம் யூரோ இருக்கும் என்றும் ஆனால் அதன் மீதுள்ள எண்கள் சரியாக தெரியாத காரணத்தினால் அது யாருக்கு சொந்தமானது என தீர்மானிக்க முடியவில்லை என்றனர்.
மேலும், தங்க கட்டி கிடைத்த இடத்தில் பொலிசார் நடத்திய சோதனையில் வேறு எந்த விதமான விலை மதிப்பில்லா பொருட்களும் கிடைக்கவில்லை.
தற்போது ஆய்வாளர்கள் சிலரை கொண்டு தங்க கட்டி மீதுள்ள எண்களை கண்டறியும் பணி நடந்துக்கொண்டு இருப்பதாக தெரிவித்தனர்.
தங்க கட்டியின் உண்மையான உரிமையாளர் தெரிய வரவில்லை என்றாலோ, அல்லது அது குற்றப்பின்னணியுடன் இல்லாமல் இருந்தாலோ, தங்க கட்டியை கண்டெடுத்த சிறுமியிடமே ஒப்படைக்கப்படும் என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.