டாஸ்மாக் மதுக் கடையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய சசிபெருமாள், இறந்தது எப்படி என்ற பரபரப்பு தகவல்களை, அவருடன் செல்பேசி கோபுரத்தின் மீது ஏறிய,
கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவர் ஜெயசீலன் நேற்று வெளியிட்டார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலைவர் ஜெயசீலன் நேற்று வெளியிட்டார்.
மதுக்கடையை அகற்றக் கோரி மது போதை ஒழிப்பு மக்கள் இயக்கம் சார்பில் இறுதிக்கட்ட போராட்டமாக தீக்குளிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி காந்தியவாதி சசி பெருமாளும், நானும் கையில் மண்ணெண்ணெய் பாட்டிலுடன் செல்பேசி கோபுரத்தில் காலை 8.30 மணிக்கு ஏறினோம். களைப்பு காரணமாக நான் பாதியிலேயே நின்றுவிட்டேன். ஆனால் சசிபெருமாள் செல்பேசி கோபுரத்தின் உச்சி வரை சென்றுவிட்டார்.
அவர் எனக்கு மேலே சுமார் 100 அடி உயரத்தில் இருந்ததால் என்னால் அவருடன் பேச முடியவில்லை. மேலும் வெயிலும் கடுமையாக இருந்ததால் எங்களுக்கு களைப்பு ஏற்பட்டது.
அதிகாரிகளும் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. இதனால் 5 மணி நேரத்துக்கும் மேல் வெயிலில் நாங்கள் அவதிப்பட்டதால் கீழே திரண்டிருந்த மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ஆனாலும் அதிகாரிகள் தாமதமாகவே பேச்சு நடத்தி, 7 நாட்களில் மதுக் கடையை அடைப்பதாக ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர். ஆனால் செல்பேசி கோபுரத்தில் இருந்து கீழே இறங்க முடியாத அளவுக்கு நாங்கள் சோர்வாக இருந்தோம்.
அதற்குள் தீயணைப்பு வீரர்கள் மேலே ஏறிவந்தனர். முதலில் சசிபெருமாளை மீட்கும்படி நான் கூறியதால் என் அருகே ஒரு வீரர் நின்றுகொள்ள மற்றவர்கள் மேலே சென்றனர்.
தீயணைப்பு வீரர்கள் சசிபெருமாளை சூழ்ந்து கொண்டு அவரை மீட்டதாலும், கடும் வெயில் காரணமாகவும் மேலே என்ன நடக்கிறது என்பதை என்னால் தெளிவாக பார்க்க முடியவில்லை.
அதன்பிறகு சசிபெருமாளை கீழே கொண்டு வந்தபோது அவரது வாய், மூக்கில் இருந்து ரத்தம் வந்திருந்தது. அவரது சட்டை ரத்தக் கறையுடன் காணப்பட்டது. அவரது கழுத்தில் கயிறு இறுகியிருந்தது.
அவரை மீட்கும்போது முதலில் கயிற்றை அகற்றாதது ஏன்? சசிபெருமாள் எப்படி இறந்தார் என்ற விவரத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை. எனவே, இதில் மர்மம் இருப்ப தாக சந்தேகம் எழுந்துள்ளது.
அதிகாரிகள் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி எங்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருந்தால் சசிபெருமாளை காப்பாற்றி இருக்க முடியும் என்றார்.