அண்மையில் உயிருடன் பிடிபட்ட பாகிஸ்தான் தீவிரவாதியிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பினருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது கடந்த 5–ந் தேதி தீவிரவாதிகள் 2 பேர் தாக்குதல் நடத்தினர். இதில் 2 வீரர்கள் உயிரிழந்ததுடன், ஒரு தீவிரவாதியும் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட மற்றொரு தீவிரவாதியான முகமது நவீத் யாகூப் என்ற உஸ்மான் கான் உயிருடன் பிடிபட்டான். அவனிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின் போது தீவிரவாதி நவீத், தேசிய புலனாய்வு அதிகாரிகளிடம் தொடர்ந்து முன்னுக்குப்பின் முரணான தகவல்களை வழங்கி வருகிறான்.
இந்த நிலையில், தீவிரவாதி நவீத் யாகூபிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று தேசிய புலனாய்வு அதிகாரிகள் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தனர்.
தீவிரவாதி நவீத்தும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, தீவிரவாதி முகம்மது நவீத்திடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தாலாம் என்று நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நாளை டெல்லியில் உள்ள சி.ஜி.ஓ வளாகத்தில் காலை 11 மணியளவில் இந்த சோதனை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே முன்னுக்கு பின் முரணனான தகவல்களை தீவிரவாதி அளித்து வருவதால், இந்த சோதனை நடத்தப்படுவதன் மூலம் பல்வேறு ரகசிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.