ஸ்ரீசாந்துக்குத் தடை.. கேரள முதல்வர் எதிர்ப்பு

ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் மீது விதிக்கப்பட்ட ஆயுள்காலத் தடை நீடிக்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதற்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த், அங்கித் சவாண், அஜித் சாண்டிலா ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வந்த டெல்லி நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கடந்த வாரம் இவர்கள் 3 பேர் உள்பட 36 பேரை விடுவித்தது.

இதைத் தொடர்ந்து ஸ்ரீசாந்த் மீதான ஆயுள்காலத் தடையை நீக்க வேண்டும் என்று கேரள கிரிக்கெட் சங்கம், பிசிசிஐ-க்கு அண்மையில் கடிதம் எழுதியது.

ஸ்ரீசாந்த் உள்ளிட்டோருக்கு ஆயுள்காலத் தடை விதிக்கப்பட்ட பிசிசிஐ-யின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. இந்த விவகாரத்தில் பிசிசிஐ எடுத்த முந்தைய முடிவு தொடரும். குற்ற நடவடிக்கை, ஒழுங்கு நடவடிக்கை இரண்டும் வெவ்வேறானவை.

சம்பந்தப்பட்ட வீரர்களின் ஒழுங்கீனச் செயல்கள் குறித்து ஊழல் தடுப்புக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆயுள்காலத் தடை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

எனவே இந்த வீரர்களின் (ஸ்ரீசாந்த், அங்கித் சவாண் உள்ளிட்டோர்) ஆயுள்காலத் தடை தொடரும் என்று பிசிசிஐ செயலர் அனுராக் தாக்குர் தெரிவித்தார். இதற்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

இந்த விஷயத்தில் பிசிசிஐயின் நிலைப்பாடு சரியல்ல. ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் இருந்து நீதிமன்றமே விடுவித்து விட்ட பிறகு, தீர்ப்பை ஏற்று ஸ்ரீசாந்த் மீதான தடையை பிசிசிஐ நீக்க வேண்டும்.

ஆனால் பிசிசிஐயின் நிலைப்பாடு வேறு மாதிரி உள்ளது. இது தவறானது. ஸ்ரீசாந்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
Tags:
Privacy and cookie settings