கேரளாவில் உள்ள ஆசியாவிலேயே 2வது உயரமான யானை என்ற பெருமையை பெற்ற யானையின் உணவில், பிளேடு துண்டுகள் கலக்கப்பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சூரில் உள்ள தெச்சிக்கோட்டு காவு கோயிலில் பராமரிக்கப்பட்டு வரும் ராமசந்திரன் என்ற 51 வயது யானையை பெரும்பாலான கோயில் விழாக்களுக்கு அழைத்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், தற்போது கோயில் அருகே உள்ள ஒரு இடத்தில் யானைக்கு சிறப்பு சிகிச்சையும், உணவும், ஆயுர்வேத மருந்துகளும் வழங்கப்பட்டு வரும் நிலையில் நேற்று முன்தினம் இந்த யானைக்கு பாகன்கள் அரிசி சாதத்தை உருட்டி கொடுத்து கொண்டிருந்தனர்.
இதற்காக பாத்திரத்தில் இருந்து சாதத்தை எடுத்த போது அதில் ஒரு முழு பிளேடும், 4 பிளேடு துண்டுகளும் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து கோயில் நிர்வாகிகள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
யானை கட்டப்பட்டிருக்கும் பகுதி வழியாகத்தான் கோயிலுக்கு பக்தர்கள் செல்வதாலும், திறந்த வெளியில் உணவு தயாரிக்கப்படுவதாலும், யானையை கொல்ல யாராவது இதனை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தற்போது இது குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.