பாராளுமன்ற முடக்கத்திற்கு தீர்வு ஏற்படுமா? அனைத்துக் கட்சி கூட்டம்

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து வரும் திங்களன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
வியாபம் முறைகேடு, லலித் மோடிக்கு உதவியது உள்ளிட்ட அஸ்திரங்களை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

மேற்கண்ட குற்றச்சாட்டுகளில் சிக்கிய சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே, சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை பா.ஜ.க. ஏற்க மறுத்து வருகிறது.

இதன் எதிரொலியாக கடந்த 21 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் விவாதங்கள் ஏதுமின்றி அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. இந்தநிலையில் அவையை சுமூகமாக நடத்துவது குறித்து விவாதிப்பதற்காக நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு செவி கொடுத்து கேட்க மறுப்பதாக குற்றஞ்சாட்டினார். இதனைத் தொடர்ந்து அனைத்துக் கட்சி கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.

முன்னதாக “வியாபம் முறைகேடு, லலித் மோடிக்கு உதவியது குறித்து நாடாளுமன்ற கூட்டுத் தொடரின் முதல் நாளிலேயே விவாதம் நடத்த சுஷ்மா தயாராக இருந்தார். இதனை காங்கிரஸ் மறந்து இருக்கலாம்.
ஆனால் இப்பிரச்சனையில் விவாதமே நடைபெறவில்லை என்பதை நாட்டு மக்கள் தெரிந்துகொள்வது அவசியம்” என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்திருந்தார்.

பிரசாத்தின் பேச்சுக்கு பதிலளித்த மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், சுஷ்மா, வசுந்தரா ராஜே, சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் மீது எந்தமாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோணத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற வேண்டும் என்று கூறியிருந்தார்.

பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டில் தற்போது வரை உறுதியாகவே உள்ளன. இந்த நிலையில் வரும் திங்களன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Tags:
Privacy and cookie settings