ராமேசுவரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடல் நல்லடக்கத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மார்ஷியல், அன்னா உள்ளிட்ட 6 சுற்றுலா பயணிகளும் கலந்து கொண்டனர்.
சுமார் 3 மணி நேரம் அந்த நிகழ்ச்சியை பார்வையிட்ட பின்னர் அன்னா ‘தி இந்து’ செய்தியாளரிடம் நேற்று கூறியதாவது:
எங்களுடைய ராமேசுவரம் பயணம் சுமார் 4 மாதங்களுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. அப்துல் கலாம் உடல் அடக்கம் நடைபெறுவதால் இப்போது ராமேசுவரம் செல்ல வேண்டாம் என்று மதுரையிலேயே சுற்றுலா வழிகாட்டிகள் எச்சரித்தனர்.
ஏன் என்று கேட்டபோது, தமிழ்நாடு முழுவதிலும் இருந்து அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் வருவார்கள் என்றனர்.
வெறும் கட்டிடங்களையும், கோயில்களையும் பார்ப்பதற்குப் பதில், ஒரு முக்கியத் தலைவரின் இறுதி அஞ்சலியை பார்த்துவிடலாமே என்றுதான் வந்தோம். ஒரு தனிமனிதருக்கு இவ் வளவு கூட்டமா என்று பிரமிப்பாக இருக்கிறது.
இவ்வளவு கூட்டத்தையும், போலீஸாரையும் பார்த்தபோது என்னவோ நடக்கப் போகிறது என்று கொஞ்சம் பயமும் இருந்தது. ஆனால், இளைஞர்கள் பக்குவத்தோடு நடந்து கொண்டார்கள்.
‘இளைஞர்கள் சுயநலவாதி களாக இருக்கிறார்கள், அவர் களுக்கு அரசியல் நாட்டமோ, நாட்டுப்பற்றோ இல்லை’ என்ற குற்றச்சாட்டு உலகம் முழுவதும் இருக்கிறது.
ஆனால், அதை எல் லாம் உடைத்தெறியும் விதமாக இந்திய இளைஞர்கள் நடந்து கொண்டார்கள். எங்கள் இந்தியப் பயணத்தின் மறக்க முடியாத அனுபவம் இது” என்றார்.