என்.எல்.சி. தொழிலாளர்கள் போராட்டத்துக்கு உடனே தீர்வு ராமதாஸ்!

என்.எல்.சி. தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதுடன், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் இருளில் மூழ்குவதும் தடுக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 
 
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் நிரந்தர தொழிலாளர்கள் 24 நாட்களாக வேலைநிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனர். 

அவர்களுக்கு ஆதரவாக ஒப்பந்தத் தொழிலாளர்களும் நேற்றிரவு முதல் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். 

என்.எல்.சி ஊழியர்களின் ஊதிய உயர்வுக் கோரிக்கை அநியாயமானதோ, நிறைவேற்ற முடியாததோ அல்ல. கடந்த காலத்தில் வழங்கப்பட்ட ஊதிய உயர்வைத் தான் இம்முறையும் அவர்கள் கோருகின்றனர். 

கடந்த 1997 ஆம் ஆண்டு என்.எல்.சி நிர்வாகத்துக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே 10 ஆண்டு கால ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அப்போது 60% ஊதிய உயர்வும், இரு கூடுதல் ஊதிய உயர்வும் வழங்கப்பட்டது. 

அதன்பின்னர் 2007-ம் ஆண்டு ஊதிய ஒப்பந்தந்தத்தில் 25% ஊதிய உயர்வு மற்று ம் பிற சலுகைகளை நிர்வாகம் வழங்கியது. அதேபோல் இப்போதும் 24% ஊதிய உயர்வு மற்றும் சலுகைகளை வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோருகின்றனர். 

இதை ஆண்டுக் கணக்கில் பார்த்தால் ஊழியர்களுக்கு கிடைக்கும் ஊதிய உயர்வு 3 %முதல் 4% மட்டுமே. ஆனால், இந்த ஊதிய உயர்வைக் கூட வழங்க நிர்வாகம் மறுப்பது தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம். 

என்.எல்.சி. நிரந்தரத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கிய போதே அவர்களுடன் பேச்சு நடத்தி இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என பாமக வலியுறுத்தியது. 

கடந்த 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்.எல்.சி. தொழிற்சங்கவாதிகள் என்னை சந்தித்து பேசியதையொட்டி வெளியிட்ட அறிக்கையிலும் இதே கருத்தை நான் வலியுறுத்தியிருந்தேன். 

 

ஆனால், பலகட்ட பேச்சு நடத்தப்பட்ட போதிலும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தர முடியாது என்பதில் நிர்வாகம் உறுதியாக இருந்ததால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

பொதுவாக தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தால், அவர்களை சமாதா னப்படுத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்குத் தான் நிர்வாகம் முயலும். ஆனால், என்.எல்.சி. நிர்வாகமோ தொழிலாளர்களை மிரட்டிப் பணி ய வைக்கும் முயற்சியில் தான் ஈடுபட்டது.

தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் ஊடகங்களில் விளம்பரம் செய்த நிர்வாகம், அடுத்தக் கட்டமாக தொ.மு.ச.தலைவர் திருமாவளவனை பணி நீக்கம் செய்துள்ளது. இதன் மூலம் அமைதியாக பணி செய்து கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்களையும் போராடத் தூண்டியது நிர்வாகம் தான். 

என்.எல்.சி.யில் பணியாற்றும் 12,000 நிரந்தர தொழிலாளர்களும், 10,000 ஒப்பந் தத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால் சுரங்கப்பணி கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் நிலையில் உள்ளவர்க ளைக் கொண்டு அனல் மின்நிலையப் பணிகள் மட்டும் நடைபெற்று வருகின்றன. 

இதனால் அங்கு செய்யப்படும் மின்னுற்பத்தியின் அளவு 2890 மெகாவாட்டில் இருந்து 1700 மெகாவாட் ஆக குறைந்து விட்டது. அனல் மின் நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலக்கரி இன்னும் இரு நாட்களுக்கு மட்டுமே போதுமானதாகும். 

இத்தகைய சூழலில் வேலைநிறுத்தம் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்படாவிட்டால் இரு நாட்களுக்குப் பிறகு எந்த நேரமும் மின்னுற்பத்தி முற்றிலும் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 

அவ்வாறு முடங்கினால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கிவிடும் ஆபத்து இருப்பதை மத்திய அரசு உணர வேண்டும். 

தொழிலாளர்களுடன் பேசி பிரச்சினைக்கு தீர்வு காண என்.எல்.சி. நிர்வாகம் தயாராக இல்லை என்பதால், இப்பிரச்சினையில் மத்திய அரசு நேரடியாக தலையிட்டு பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
இதன்மூலம் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதுடன், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் இருளில் மூழ்குவதும் தடுக்கப்பட வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார். 
Tags:
Privacy and cookie settings