சுத்தத்தை வலியுருத்தும் ஒரே மார்க்கம் இஸ்லாம்!

இஸ்லாம் மார்க்கம் ஒரு இயற்கை மார்க்கமாகும். அதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு சட்டங்களும் வழிகாட்டல்களும் நடைமுறை வாழ்வுக்கு கனக் கச்சிதமாகப் பொருந்தக் கூடியவையே!
 
இன்றைய மருத்துவ உலகில் நிரூபணம் செய்யப்படும் விடயங்களும், முன்மொழியப்படும் சுகாதாரத் திட்டங்களும் பல நூறு வருடங்களுக்கு முன்னாலேயே அல்லாஹ்வின் தூதரால் சொல்லப்பட்டவையே!

பொதுவாக இவ்வுலகில் மக்களால் அதிகம் பின்பற்றப்படும் மதங்களாக இருந்தாலும் 'கடவுளுக்குச் செய்ய வேண்டிய அர்ச்சனைகளோடு' தமது வழிகாட்டலை முடித்துக் கொள்வது தான் அவைகளின் வழக்கம்.

சமூக ஒழுக்கங்கள் பற்றியோ, சுகாதாரத் திட்டங்கள் பற்றியோ, அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் பற்றியோ அவைகள் அறவே பேசுவதில்லை.

அந்த மதங்களில் மனிதக் கரங்கள் ஊடுருவி பல தில்லுமுல்லுகளை அரங்கேற்றி முரண்பாடுகளின் மொத்தத் தொகுப்பாக மதங்களை ஆக்கி வைத்திருப்பதே இதற்குக் காரணம் எனலாம்.

திரிவடைந்தும், திசைமாறியும் போன அந்த மதங்களில் நாம் வழிகாட்டல்களை எதிர்பார்க்கவும் கூடாது.

அதே நேரம் இஸ்லாத்தைப் பொருத்தமட்டில் தனித்து விளங்கும் மார்க்கமாக அது இருப்பதால் பல விஞ்ஞான உண்மைகளையும், உலகத்திற்குத் தேவையான நல்ல பல திட்டங்களையும் அது தன்னகத்தே கொண்டுள்ளது.

அந்த வகையில் எந்த மதமும் சொல்லாத சில ஒழுக்கங்களை இஸ்லாம் மனித குலத்திற்கு முன்வைத்துள்ளது.

ஒருவர் இறைவனை நம்பினால் மட்டும் போதாது மாறாக இவ்வுலக வாழ்வில் தூய்மையையும் கடைப்பிடித்தொழுக வேண்டும் என இஸ்லாம் வலியுருத்துகின்றது.

பிரச்சாரமும் அவசியம்! தூய்மையும் அவசியம்! இஸ்லாத்தின் ஆரம்பகால கட்டத்தில் அருளப்பட்ட அத்தியாயங்களில் முத்தத்திர் எனும் (74) அத்தியாயமும் ஒன்றாகும்.

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (வானவர் ஜிப்ரீல் அவர்கள் முதன் முதலாக ஹிரா குகையில் எனக்கு வஹீ கொண்டு வந்தார்.) பிறகு சிறிது காலத்திற்கு (மூன்றாண்டுகளுக்கு) எனக்கு வஹீ வருவது நின்று போய் விட்டது.

(அந்தக் கால கட்டத்தில் ஒரு முறை) நான் (பாதையில்) நடந்து சென்று கொண்டிருந்த போது வானத்திலிருந்து ஒரு சப்தத்தைக் கேட்டேன். உடனே, என் பார்வையை வானத்தை நோக்கி உயர்த்தினேன்.

அங்கே ஹிரா குகையில் என்னிடம் வந்த அதே வானவர் வானத்திற்கும் பூமிக்குமிடையே (இருந்த பிரமாண்டமான) ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தார்.
அவரைக் கண்டு நான் பீதிக்குள்ளாகி விட்டேன். அதன் விளைவாக (மூர்ச்சையுற்றுத்) தரையில் விழுந்து விட்டேன்.

பிறகு, (மயக்கம் தெளிந்தவுடன்) என் வீட்டாரிடம் சென்று, எனக்குப் போர்த்துங்கள். எனக்குப் போர்த்துங்கள் என்று (நடுக்கத்துடன்) கூறினேன். அவ்வாறே போர்வை போர்த்தப்பட்டது

அப்போது அல்லாஹுத்தஆலா, (போர்வை) போர்த்திக் கொண்டிருப்பவரே!  எழுந்து எச்சரிக்கை செய்வீராக! உமது இறைவனை பெருமைப்படுத்துவீராக!

உமது ஆடைகளைத் தூய்மைப்படுத்துவீராக! அசுத்தத்தை வெறுப்பீராக! என்னும் (74:5-1) வசனங்களை அருளினான்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: புஹாரி 3238 

இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் அல்லாஹ் அசுத்தத்தை வெறுக்குமாறு கூறிவிடுகின்றான். இதன் மூலமாக ஆன்மீகத்திற்கு சுத்தம் அவசியம் என்பதை சட்டமாக்கி விடுகின்றான்.

இன்று இறைவனைப் பெருமைப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு அழுக்கான ஆடைகளுடன் அலைந்து திரியும் எத்தனையோ போலி ஆன்மீகவாதிகளை நாம் கண்கூடாகக் கண்டு வருகின்றோம்.

அழுக்கான ஆடையுடன் தலைவிரி கோலமாக ஜட முடியும் கோரமான தாடியுமாக ஒரு கிருக்கன் வலம் வந்து 'நான் வரம் கொடுக்கும் சாமி அல்லது அவ்லியா'

எனக் கூறினால் அவனை நம்பி தமது இம்மை மறுமை வாழ்வைத் தொலைக்க ஆயிரமாயிரம் அப்பாவி ஜனங்கள் தயாராக உள்ளனர்.

அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை நோக்கி 'எழுந்து எச்சரிக்கை செய்வீராக!' என்று கூறுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் 'உமது ஆடைகளைத் தூய்மைப்படுத்துவீராக!

அசுத்தத்தை வெறுப்பீராக!' என்றும் கூறுகின்றான். ஆதலால் இஸ்லாத்தில் அழைப்புப் பணி அவசியம் போல் சுத்தமும் அவசியம் தான் என்பதை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.

தூய்மை இன்றி இறை நம்பிக்கை இல்லை! மறுமையில் ஒருவர் வெற்றி பெற வேண்டுமாயின் அவரது இறை நம்பிக்கை சரியாக இருக்க வேண்டும்.

ஈமான் எனும் அடிப்படையில் ஓட்டை, உடசல்கள் இருந்தால் இவ்வுலகில் நாம் செய்யும் எவ்வித நல்லறங்களும் மறுமையில் பயனளிக்க மாட்டாது என்பதை நாம் தெரிந்து வைத்துள்ளோம்.

இஸ்லாம் சுத்தத்தை இறைநம்பிக்கையில் சரி சமபாதியாக ஆக்கி வைத்துள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'தூய்மை என்பது இறைநம்பிக்கையில் பாதி'

அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரி (ரலி) நூல்: முஸ்லிம் 3810 

இச்செய்தியிலிருந்து ஒருவர் தனது உடல், உடை, இடம் போன்றவற்றில் சுத்தத்தைக் கடை பிடிக்காமல் அசுத்தமானவராக இருந்து அவர் அல்லாஹ்வும்,
அவனது தூதரும் ஈமான் கொள்ளுமாறு கூறிய அனைத்து விடயங்களையும் நம்பினாலும் அவர் பாதி இறைவிசுவாசியாகவே அல்லாஹ்விடம் கருதப்படுவார் என்பது தெளிவாகப் புலனாகின்றது.

தூய்மையே தொழுகையின் அஸ்திவாரம்! இஸ்லாத்தில் ஐம்பெரும் கடமைகளில் தொழுகை மிக மிக அவசியமானது.

இஸ்லாத்திற்கும் இறைநிராகரிப்பிற்கும் இடையில் வேறுபாட்டை ஏற்படுத்துவதே தொழுகை தான். தொழுகை இல்லாதவன் எந்தக் கொள்கையில் இருந்தாலும் அவன் வழிகெட்டவன் என்பதில் சந்தேகமில்லை.

இந்தத் தொழுகையை ஒருவர் நிறைவேற்ற வேண்டுமாயின் அவருக்கும் இஸ்லாம் தூய்மையை அவசியமாக்கியுள்ளது.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'தூய்மை இல்லாமல் தொழுகை இல்லை'

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: முஸ்லிம் 382 

ஒருவர் தூய்மை இன்றி தனது தொழுகையை நபி வழிப்படி எவ்வளவு சிரத்தை எடுத்துத் தொழுதாலும் அது அல்லாஹ்விடத்தில் ஒப்புக் கொள்ளப்படுவதில்லை.

காரணம் எப்படித் தொழுகின்றார் என இறைவன் கவனிப்பது போல் தொழுகைக்கு நிற்பவர் தூய்மையாக இருக்கின்றாரா? எனவும் கவனிக்கின்றான்.

தொழுபவர் தூய்மை இன்றி எவ்வளவு பயபக்தியாகத் தொழுதாலும் அல்லாஹ் அவற்றை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை.

இதிலிருந்து இஸ்லாம் வலியுருத்தும் சுத்தம் சுகாதாரத்தின் அவசியத்தை உணர்ந்து கொள்ளலாம். தூங்கி எழுந்ததிலிருந்தே தூய்மையைக் கடைபிடி! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

'உங்களில் ஒருவர் தூங்கி விழித்தொழுந்தால் மூன்று முறை தன் கையை கழுவுகின்ற வரை பாத்திரத்தில் கையை நுழைக்க வேண்டாம்!'

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 468 

பொதுவாக நாம் உறங்கி விட்டால் எமது கரங்கள் எமது கட்டுப்பாட்டை விட்டும் விலகி விடுகின்றன.

எமது உடலில் வெற்றுக் கண்ணுக்குப் புலப்படாத நுண்ணங்கிகள் வாழுவதை மருத்துவ உலகம் இன்று நிரூபித்துள்ளது. நாம் அயர்ந்து உறங்கி விட்டால் எமது கைகள் எந்த அசுத்தங்களை அலசுகின்றன என்பதும் எமக்குத் தெரியாது.

தூங்கி எழுந்தவுடன் கைகளில் நுண்ணங்கிகள் ஒட்டியிருக்கின்றனவா? இல்லையா? என்பதைக் கூட சாதாரணமாக நாம் தீர்மானித்து விட முடியாது.

காரணம் அவைகளை நுண்ணோக்கிகள் (Microscopes) மூலமாவே மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிகின்றனர். இவைகளையெல்லாம் வைத்தே இஸ்லாம் 'தூங்கி எழுந்ததிலிருந்து தூய்மையைக் கடைபிடிக்கச்'சொல்கின்றது.

பல் துலக்குவதால் இறைவனின் பொருத்தம் கிடைக்குமா? இஸ்லாம் தவிர்ந்த ஏனைய மதங்கள் தமது மக்களுக்கு 'கடவுள் நெருக்கம்' கிடைக்க வேண்டுமாயின் காவடி தூக்குவதையும், தீமிதிப்பதையுமே போதிக்கும்.

ஆனால் தனித்து விளங்கும் இந்த இஸ்லாம் மாத்திரம் பல் துலக்கினால் 'இறை பொருத்தம்' கிடைப்பதாகச் சொல்கின்றது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'பல் துலக்குவது வாய்க்கு சுகந்தத்தையும், இறைவனிடத்தில் பொருத்தத்தையும் பெற்றுத் தருகின்றது'

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: நஸாயி 05. 

தினமும் இரு முறை பல் துலக்கினால் இருத நோய் வராது லண்டன் ஆய்வு! 22.10.2011 அன்று சிறீலங்கா மிரர் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் பின்வருமாறு இடம் பெற்றிருந்தது.

தினமும் இரண்டு முறை பல் துலக்குபவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்புக் குறைவு என லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது. லண்டனில் இருந்து வெளி வரும் மருத்துவ இதழ் ஒன்று இந்த ஆய்வை மேற்கொண்டது.

இந்த ஆய்வை பேராசிரியர் ரிச்சர்டு வாட் என்பவர் தலைமையேற்று நடத்தினார்.11ஆயிரம் பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் வாய் சுத்தத்திற்கும், இதய ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக வாட் கூறினார்.

தினமும் இரு முறை பல் துலக்குபவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு 70 சதவீதம் குறைவு எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வாயில் புண் ஏற்பட்டால் பக்டீரியா தொற்று ஏற்பட்டு அதனால் இதயம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல இதய நோய் பராமரிப்பு செவிலியர் ஜூடி ஓ சுலிவான் தெரிவித்தார்.

தினமும் காலையிலும், இரவிலும் பல் துலக்குவதால் வாய்ப்புண்ணால் ஏற்படும் பக்டீரியா தொற்று தடுக்கப்பட்டு இதயம் காக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இதுபற்றி வாட் கூறுகையில் தங்களது ஆய்வு முடிவுகளை இதய நோய் வல்லுனர்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் இது பற்றி மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
அறிவியல் உலகம் கண்டு பிடித்த இந்த உண்மையை பல நூறு வருடங்களுக்கு முன்னாலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல் துலக்குவதை கடமையாக்கும் அளவிற்கு வலியுருத்தி விட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னுடைய சமுதாயத்திற்கு சிரமம் என்றில்லாவிட்டால் ஒவ்வொரு வுழூவின் போதும் பல் துலக்குவதை கடமையாக்கியிருப்பேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத் 8827 

நபி (ஸல்) அவர்கள் இரவில் (தொழுகைக்காக) எழும் போது பல்துலக்கு(ம் குச்சியால் வாயை சுத்தம் செய்)வார்கள்

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி) நூல்: புகாரி 889 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பல்துலக்குவது பற்றி நான் உங்களிடம் (திரும்பத் திரும்ப) பல முறை வலியுறுத்தியுள்ளேன்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல் : புகாரி 888 

ஆகவே எந்த மதமும் சொல்லாத பல்லாயிரம் உண்மைகளையும் அறிவியல் நிரூபணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள இஸ்லாத்தை அதன் மகத்துவம் தெரிந்து கடைப்பிடிப்போமாக!
Tags:
Privacy and cookie settings