டெல்லியில் 6 மாதத்தில் 3,889 குழந்தைகள் மாயம்.. அதிர்ச்சி தகவல்!

டெல்லியில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாதத்தில், நாளொன்றுக்கு 21 குழந்தைகள் என்ற விகிதத்தில் மொத்தம் 3,889 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து, காங்கிரஸ் தலைவர் மோதிலால் வோரா மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய் செளத்ரி, ''டெல்லி என்.சி.ஆர். பகுதியில்

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரையில் 3,889 குழந்தைகள் காணாமல் போயினர். இவர்களில் 1,715 பேர் சிறுவர்கள். 2,174 பேர் சிறுமிகள்.

அப்படி காணாமல் போன குழந்தைகளில் 2,337 பேர் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 1,500க்கும் மேற்பட்ட குழந்தைகளை போலீஸார் இன்னும் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.

அதில் 610 சிறுவர்களும், 942 சிறுமிகளும் அடங்குவர். மேலும், டெல்லி என்.சி.ஆர்., டெல்லி என்.சி.டி. ஆகிய பகுதிகளில் இருந்து காணாமல் போன குழந்தைகள் குறித்து தொகுக்கப்பட்ட தகவல்கள் பராமரிக்கப்படவில்லை.

ஆனாலும், குழந்தைகள் காணாமல் போகும் பிரச்னையை சமாளிக்கும் வகையில் 'ஸ்னேஹ்' என்ற திட்டத்தை டெல்லி போலீஸார் செயல்படுத்தியுள்ளனர்.

காவல் நிலையங்களில் இருக்கும் சிறார் நல அதிகாரிகள், அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து, இந்தத் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டுள்ளனர்" என்றார்.
Tags:
Privacy and cookie settings