மினா நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மயிலாடு துறையைச் சேர்ந்த ஒருவர் பலியானது தொடர்பாக உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவுதி அரேபியாவில் புனித மெக்கா அருகே மினா நகரில் சாத்தான் மீது கல் எறியும் நிகழ்ச்சியின் போது நேற்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 700க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். 800க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 3 தமிழர்கள் உட்பட 14 பேர் இந்தியர்கள் என அறிவிக்கப் பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் மயிலாடுதுறையைச் சேர்ந்த சம்சுதீன் முகமது இப்ராஹிம் என தெரிய வந்துள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வடகரையைச் சேர்ந்த இவர், மனைவி சம்சாத் பேகத்துடன் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொண்டார்.
சிறுவயதிலேயே மலேசியா சென்று வேலை பார்த்த சம்சுதினுக்கு இரண்டு மகன்கள். இறுதி காலத்தில் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டு மனைவியோடு ஹஜ் யாத்திரை சென்றுள்ளார் சம்சுதீன்.
எதிர்பாராதவிதமாக அங்கு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி அவர் உயிரிழந்து விட்டார். சம்சாத் பேகம் உயிரோடு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.