துருக்கி கடற்கைரையில் இறந்த நிலையில் அய்லான் என்ற மூன்று வயது சிறுவன் கண்டெடுக்கப்பட்டது உலகையே அதிர்ச்சி அடைய செய்த நிலையில்,
கீரிஸுக்கு செல்லும் வழியில் படகு நீரில் முழ்கும் போது, தனது கையில் இருந்து எனது மகன் அல்யானை நழுவ விட்டு விட்டேன் என சிறுவனின் தந்தை உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சிரியாவில் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருவதால், அண்டை நாடான துருக்கி வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக சென்று கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அகதிகள் பிரச்சினையை ஐரோப்பிய நாடுகள் தீராத தலை வலியாக கருதுகின்றன.
இந்த நிலையில் தான் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள கொபானி நகரில் உள்நாட்டுப் போருக்கு பயந்து, உயிர் பிழைப்பதற்காக ஏராளமானோர் கடந்த ஆண்டு துருக்கிக்கு சென்றனர்.
அங்கிருந்து அவர்கள் படகுகள் மூலமாக பாதுகாப்பற்ற பயணம் மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர்.
அப்படி துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டின் மோஸ் தீவுக்கு 2 படகுகளில் 23 அகதிகள் சென்றனர். ஆனால் அந்த படகுகள், துருக்கியில் பொத்ரும் நகருக்கு அருகே கவிழ்ந்து விட்டன.
அவற்றில் 9 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். மற்றவர்கள் நடுக்கடலில் பலியாகினர். பலியானவர்களில் 5 பேர் பச்சிளங் குழந்தைகள்.
அப்படி பலியான ஒரு பிஞ்சுக் குழந்தையின் உயிரற்ற உடல், கரை ஒதுங்கிக் கிடந்த கோர காட்சி உலக நாடுகளையே ஒரு கணம் அதிரவைத்தது.அந்தக் குழந்தையின் பெயர் அய்லான்.
அய்லானின் தந்தையின் பெயர் அப்துல்லா என்று துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால், ஷேனு என்று அழைக்கப்படும் அவர், இந்த படகு விபத்தில் தனது இரு மகன்கள் மற்றும் மனைவியை இழந்துள்ளார்.
மிகுந்த உருக்கத்துடன் தனது குழந்தைகள் மனைவி இறந்து பற்றி துருக்கி செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், எனது மனைவியின் கைகளை நான் பிடித்துக் கொண்டிருந்தேன்.
ஆனால், எனது கைகளில் இருந்து குழந்தைகள் தவறி விட்டனர். அந்த சிறிய படகை நாங்கள் இறுக்கமாக பிடித்து இருந்தோம்.
சிறிது நேரத்தில் படகு கவிழ்ந்து விட்டது. மிகவும் இருட்டாக தென்பட்டது. அனைவரும் கூக்குரலிட்டனர் என்று மிகவும் உருக்கத்துடன் கூறினார்.