கபாலி ரஜினி கெட்டப் என்ற பெயரில் கடந்த 12 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருந்த அந்தப் படத்திலிருப்பது ரஜினியே அல்ல என்று இயக்குநர் பா ரஞ்சித் மறுத்துள்ளார்.
ஜடாமுடி, முகம் முழுக்க நாடகக் கலைஞர் மாதிரி மேக்கப் போட்டு செல்ஃபி எடுக்கும் போஸில் ஒரு ஸ்டில் நேற்று இரவு இணையத்தில் வெளியாகி, 'யார் இந்த நடிகர், கண்டுபிடியுங்கள்!' என்று கேட்டிருந்தனர்.
இதனை சிலர் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட இதர சமூகத் தளங்களில் பகிர, இது கபாலி ரஜினிதான் என்று ரசிகர்கள் பேச, கருத்து கூற ஆரம்பித்துவிட்டனர். விடிவதற்குள் அந்த புகைப்படம் பெரும் பரபரப்பைக் கிளப்பிவிட்டது.
அது கபாலி ரஜினிதான் என்று 99 சதவீதம் எல்லோரும் நம்ப ஆரம்பித்த நிலையில், அதுகுறித்து மறுப்பு தெரிவித்துள்ளார் இயக்குநர் ரஞ்சித். இந்தப் படத்தில் இருப்பது ரஜினியே அல்ல.. என்று அவர் தெரிவித்துவிட்டார்.
நடிகர் மோகன் ராம் அதற்கு முன்பே, 'நான் நன்கு விசாரித்துவிட்டேன், இது ரஜினியல்ல," என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அந்தப் படத்தில் இருப்பது டிவியிலிருந்து சினிமாவுக்கு நடிக்க வந்துள்ள மா கா பா ஆனந்த் என்பவர்தான் என்று கூற ஆரம்பித்துள்ளனர்.
ச்சே... இந்த டெம்ப்டேஷனைக் குறைக்க.. அட்லீஸ்ட், ஒரு அஃபிஷியல் ஸ்டில்லையாவது கொடுத்துடுங்கப்பா!