தொல்லியல் புராதன சின்னத்திற்கு அருகே கிரானைட் குவாரி !

தொல்லியல் துறையின் புராதன சின்னமாக விளங்கும் கழுகுமலை அருகே, கிரானைட் குவாரிக்கு அனுமதி கொடுத்தது குறித்து சகாயம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடு குறித்து இறுதி கட்ட விசாரணையில் ஈடுபட்டுள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம், 

புராதன சின்னங்கள் நிறைந்த கழுகுமலைக்கு அருகிலேயே குவாரி, பெரியாறு பாசனக் கிளை கால்வாய், கண்மாயை ஆக்கிரமித்து தொழிற்சாலை அமைந்தது கண்டு அதிர்ச்சியுற்றார்.

மீனாட்சிபுரத்தில் 129 ஏக்கர் பரப்பில் கழுகுமலை உள்ளது. இந்த மலையில் உள்ள ஐந்து சமணர் படுகைகள், 'தொல்லியல் துறையின் கீழ் புராதன சின்னமாக உள்ளது.' இம்மலைக்கு அருகே குவாரிக்கு அனுமதி அளிக்கலாமா? என்று அதிகாரிகளிடம் சகாயம் கேட்டார்.

கழுகுமலை, 'மாங்குளம் கல்வெட்டுகள்' என தொல்லியியலாளர்களால் அழைக்கப்பட்டது. தற்போது, 'மீனாட்சிபுரம் கல்வெட்டுகள்' என அழைக்கப்படுகிறது. 

இம்மலைக்குன்றில் ஐந்து இயற்கைக் குகைகள், 80 கற்படுக்கைகள், ஐந்து சமணர் படுகைகள் உள்ளன. மீனாட்சிபுரத்தில் நான்கு இடங்களில் தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வு நடத்தியுள்ளது.

மலையின் மேல்பகுதியில் இரு இடங்களிலும், மலையின் கீழ்பகுதியில் இரு இடங்களிலும் நடத்தப்பட்ட அகழாய்வு மூலம், அவை வெவ்வேறு காலகட்டத்தைச் சார்ந்தவை என கண்டறியப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளம் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளில் உள்ள எழுத்துக்கள், மீனாட்சிபுரம் கல்வெட்டுகளில் காணப்படும் தமிழி எழுத்துக்களை ஒத்துள்ளதாக டாக்டர் இரா.நாகசாமி குறிப்பிட்டுள்ளார்.

இங்கு காணப்படும் கல்வெட்டுகளில் தமிழி எழுத்துக்களுடன் பிராகிருதச் சொற்களும் கலந்து எழுதப்பட்டுள்ளன. ஸிரி, தம்மம், பளி, ஸுதன், நிகமம், கணி ஆகிய பிராகிருதச் சொற்கள் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன. 

கல்வெட்டுகளில் குறிக்கப்படும் நந்தஸிரியக்குவன் என்ற சமணத்துறவி, துறவிகளின் தலைவராக இருந்திருப்பார். கணி என்ற பிராகிருதச் சொல்லுக்கு மூத்த சமணத்துறவி என்று பொருள். 
 
இங்குள்ள இரண்டு கல்வெட்டுகளில் குறிக்கப்படும் நெடுஞ்செழியன், சங்கத்தமிழ் இலக்கியங்களில் பேசப்படும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் மற்றும் தலையான ங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் ஆகிய இருவரில் ஒருவராக இருக்கலாம்.

இத்தகைய சிறப்புமிக்க கழுகுமலைக்கு மிக அருகே, கிரானைட் குவாரி இருப்பது ஆபத்தான ஒன்று. 

கிரானைட் குவாரியின் பிடியிலிருந்து தொன்மையான சமணப்படுகையை அரசு காக்க வேண்டும் என்பதே வரலாற்று ஆர்வலர்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது.
Tags:
Privacy and cookie settings