பிரியங்கா சோப்ரா கணவரும்.. கனவுகளும் !

மாடலிங் துறையிலிருந்து இந்தி சினிமாவிற்கு வந்தவர். சினிமா பின்னணி இல்லாத குடும்பத்திலிருந்து வந்து தனித்து நின்று ஜெயித்தவர். அடுத்து ஆலிவுட் திரை உலகிற்கு அறிமுகமாகி, அங்கு ‘க்வென்டிகே’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.

அவரிடம் பேசுவோம்:

ஆலிவுட் தொடரில் நடிக்கும் அனுபவம் எப்படி இருக்கிறது?


அது ஒரு வித்தியாசமான அனுபவம். படப்பிடிப்பில் அனைவரும் நட்போடு பழகினார்கள். அதனால் வேலை உற்சாகமாக நடந்தது. முதல் தொடர் சிறப்பாக முடிந்திருக்கிறது.


தொடர் வெற்றியடைந்ததும், நிரந்தர ஆலிவுட் நடிகையாகி விடுவீர்களா?

நான் ஆலிவுட்டை மதிக்கிறேன். ஆனால் நிரந்தரமாக அங்கே சென்றுவிட மாட்டேன். நான் அமெரிக்காவில் இருந்து வந்தவள். அங்குதான் படித்தேன். ஆனாலும் இந்தியாவை விட்டு வேறெங்கும் செல்ல மனமில்லை. 

எங்கெங்கு எனக்கு வேலையிருக்கிறதோ அங்கங்கே சென்று பணி முடிந்ததும் இந்தியா வந்துவிடுவேன். என் நண்பர்கள், உறவுகள் எல்லாம் இங்கிருக்கும்போது வேறு எங்கே நான் போகமுடியும்.

இந்தியாவில் நடிக்கிறீர்கள். அமெரிக்காவிலும் நடிக்கிறீர்கள். தயாரிப்பாளர் பணியையும் கவனிக்கிறீர்கள்..?

இந்திய பெண்களின் தனித்துவமே அது தான். எத்தனை வேலைகள் இருந்தாலும் அத்தனையையும் சிறப்பாக செய்து முடிப்பவர்கள். எடுத்துக்கொண்ட வேலையை சிறப்பாக செய்து முடித்தால்தான் நமக்கு தன்னம்பிக்கை ஏற்படும். அது தான் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்தும்.
நீங்கள் தயாரிக்கும் சினிமாக்களில் நடிக்கவும் செய்வீர்களா?

அப்படி ஏதும் எண்ணம் இல்லை. கூடுமானவரை புதுமுகங்களை ஊக்குவிக்கத்தான் நான் சினிமா தயாரிக் கிறேன். வருங்கால சூப்பர் ஸ்டார்கள், ‘நான் பிரியங் காவால் உருவாக்கப்பட்டவர்’ என்று சொல்ல வேண்டும். அது தான் எனது தயாரிப்பின் வெற்றி. என்னாலும் நல்ல படங்களை தயாரிக்க முடியும் என்பதையும் நிரூபிக்க வேண்டும்.

சினிமாவில் பாடவும் தொடங்கிவிட்டீர்களே?

ஆமாம். ‘தில் தடக்னே தோ’ படத்திற்காக பாடியிருக்கிறேன். என்னுடன் பர்ஹான்கானும் பாடியிருக்கிறார். மிகவும் இனிமையான பாடல். படம் பார்த்த பின் நிச்சயம் ரசிகர்கள் அந்த பாடலை முணுமுணுப்பார்கள்.

தோழிகளோடு என்ன பேசுவீர்கள்?


வெட்டிப்பேச்சுதான் பேசுவோம். எல்லா நேரமும் அறிவுபூர்வமாக இயங்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. கொஞ்சம் வெட்டியாக பொழுதை போக்குவதும் சுகம்தான். செல்போனிலும் நான் விளையாடுவேன்.

ரண்வீர் சிங்குடன் இணைந்து சில படங் களில்  நடித்திருக்கிறீர்களே, அவர் எப்படிப்பட்ட நடிகர்?

ரண்வீர் நடிப்பை நேசிக்கும் நல்ல நடிகர். படப்பிடிப்பில் அனைவரிடமும் சிரித்துப்பேசி மகிழ வைப்பார். அவர் இருக்கும் இடம் எப்போதும் குதூகலமாக இருக்கும். ‘நம்முடைய மனநிலைதான் நடிப்பில் வெளிவரும். அதைத்தான் ரசிகர்கள் விரும்புவார்கள்’ என்பார். கடுமையான உழைப்பாளி.

நீங்கள் நடிக்க தூண்டுகோலாக இருந்தது யார்?


யாருமில்லை. எல்லாரும் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு பணியை செய்து தானே ஆக வேண்டும். நானும் நடிக்க வந்து விட்டேன். எனக்கு முன்னோடி என்று சொல்லிக்கொள்ள யாருமில்லை. 

என்னுடைய தேவைகளை தீர்மானிக்கும் சுதந்திரம் எனக் கிருக்கிறது. உத்தரபிரதேச மாநிலத்தின் பரேலியில் இருந்து 17 வயதில் ‘மிஸ் வேர்ல்டு’ பட்டம் பெற்றேன். இன்று நான் நடிகை. பின்னணி பாடகியும் கூட. எதிர்காலத்தில் வேறு சில துறையிலும் என் தடம் பதியலாம்.

இன்றைய நடிகர்களில் சூப்பர் ஸ்டார் யார்?

சினிமாவை பொறுத்தவரை நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று யாரும் கிடையாது. இந்த வார சூப்பர் ஸ்டார் அடுத்த வெள்ளிக்கிழமை புதிய படம் வந்ததும் இடம் மாறலாம். எப்போதும் ஒருவரே நம்பர் ஒன்னாக இருக்க முடியாது.
சல்மான் கான், ஷாருக்கானுடன் இணைந்து நடித்திருக்கிறீர்கள். அமீர்கானுடன் எப்போது நடிப்பீர்கள்?

அது இயக்குனர்களுக்கே தெரியும். அமீர்கான் சிறந்த நடிகர். அவருடன் நடிக்க ஆசைதான். அதேபோல சைய்ப் அலிகானுடனும் நடிக்க ஆசை. வருங்காலத்தில் அந்த ஆசை நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறேன்.

தீபிகா படுகோன் தன்னுடைய மன உளைச்சல்களை எல்லாரிடமும் பகிர்ந்து கொள்கிறார். இதனால் மனம் லேசாகிறது என்கிறார். நீங்களும் அப்படி செய்வீர்களா?

அது அவருடைய கருத்து. அதில் நான் தலையிட விரும்ப வில்லை. சினிமாவை பொறுத்தவரை மன அழுத்தம் எல்லோருக்கும் உண்டு. எனக்கும் உண்டு. ஆனால் பகிர்ந்து கொள்வதால் தீர்வு கிடைக்கும் என்று நான் நம்பவில்லை.

அது பல பேரிடம் போய் வேறு மாதிரி புது வடிவம் பெற்று நம்மிடமே திரும்பிவரும். எனது பிரச்சினைகளுக்கான தீர்வு என்னிடம் உள்ளது. ஒருவேளை அந்த பிரச்சினைகளை நான் பகிர்ந்துகொள்ள விரும்பினாலும் அதை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொள்ள மாட்டேன்.
நடிப்பு தவிர வேறு எந்த துறைகளில் உங்களுக்கு ஆர்வம்?

எனக்கு கணிதம் ரொம்ப பிடிக்கும். அதே போல விஞ்ஞானத்திலும் ஆர்வம் அதிகம். என்னிடம் நிறைய இயற்பியல், வேதியியல் புத்தகங்கள் உள்ளன.

வேறு என்ன தொழில்களை செய்ய விரும்புகிறீர்கள்?

சிறு தொழில்கள் பற்றி நிறைய தெரிந்துகொள்ள விரும்பு கிறேன். இப்போதெல்லாம் நடிகைகள் நடிப்பை மட்டும் நம்பிக்கொண்டிருப்பதில்லை. வேறு தொழில்களிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். நானும் அப்படித்தான். நடிப்பைத் தவிர வேறு சில துறை சார்ந்த அறிவும் நமக்கு கைக் கொடுக்கும்.

உங்களுடைய நிஜவாழ்க்கையை படமாக எடுத்தால் வரவேற்பதாக கூறியுள்ளீர்களே?

உண்மை தான். என் வாழ்க்கையில் பல சுவாரசியமான விஷயங்கள் உள்ளன. ஆனால் நான் சினிமாவாகும் அளவுக்கு இன்னும் சாதிக்கவில்லை. இன்னும் சிறிது காலம் போகட்டும்.
ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள்?

தனிமையில் அமைதியாக இருப்பேன். தனிமை எனக்கு நிம்மதி தரும். புத்தகங்கள் படிப்பேன். ஏதேனும் நீர் நிலை, அருவியின் அருகே அமர்ந்து படிப்பது எனக்கு பிடிக்கும். நீரின் சலசலப்பு என் மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.

அடுத்த ஐந்து வருடத்தில் உங்கள் வளர்ச்சி எப்படி இருக்கும்?

வருங்கால திட்டம் எதுவும் என் கையில் இல்லை. அப்படி போடும் திட்டங்கள் எல்லாமே வீண். இன்று நலமாக இருந்தால், நாளையும் நலமாக இருக்கும். இதுதான் என் கருத்து. இன்றைய நாளை பயனுள்ளதாக ஆக்கிக்கொள்வதே நாளைக்கான அடித்தளம்.

உங்கள் கனவில் வரும் ராஜகுமாரன் யார்? எப்போது நேரில் வரப்போகிறார்?


கனவில் வரும் ராஜகுமாரன் கனவில் மட்டும் தான் வருவார். நேரில் வரமாட்டார். கனவில் வரும் ராஜகுமாரனுக்கும், நேரில் வரும் ராஜ குமாரனுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. இது எல்லாருக்கும் பொருந்தும்.
உங்களுக்கு வரும் கணவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்?

நான் மதிக்கக்கூடிய வராக இருக்க வேண்டும்.
Tags:
Privacy and cookie settings