ஜம்மு காஷ்மீரில் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இதனால் அம்மாநிலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது. வழக்கறிஞர் பரிமோக் ஷ்ஷேத் என்பவர் ஜம்மு காஷ்மீரில் மாட்டினங்களை இறைச்சிக்காக வதை செய்வது
மற்றும் கொல்வதை ரண்பிர் தண்டனைச் சட்டம் (ஆர்பிசி) பிரிவுகள் 298-ஏ, 298-பி ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கக் கோரி பொது நல மனு தாக்கல் செய்தார்.
இம்மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் திராஜ் சிங் தாகுர், ஜனக் ராஜ் கோத்வால் ஆகியோரடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜம்மு காஷ்மீரில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.
எந்த இடத்திலும் மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்யவும், அதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும்,
எஸ்எஸ்பி, எஸ்பி உட்பட அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் உரிய உத்தரவுகளை வழங்க வேண்டும் என காவல்துறை தலைவருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிரிவினைவாத இயக்கங்கள் இந்த தடைக்கு எதிராக இன்று முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுத்திருந்தனர். இதனடிப்படையில் இன்று அங்கு கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டது.
பல இடங்களில் மாட்டு இறைச்சி தடைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் வெடித்தன. இதனால் வன்முறை சம்பவம் நடைபெறாத வகையில் பலத்த போலிஈஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.