‘ஷாம்பெய்ன்’ மதுபாட்டில்கள் ‘கார்க்’ எனப்படும் தக்கையால் மூடப்பட்டிருக்கும். இந்த பாட்டில்களை திறக்கும் போது, அழுத்தம் காரணமாக சில நேரங்களில் அந்த ‘கார்க்’ நீண்ட தூரத்துக்கு பறக்கும்.
இது போன்ற ஒரு சம்பவத்தால் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பயணிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.
லண்டனின் காட்வின் விமான நிலையத்தில் இருந்து துருக்கியின் டாலமன் பகுதிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் சென்று கொண்டிருந்தது.
விமானம் நடுவானில் செல்லும் போது, பயணி ஒருவருக்கு வழங்குவதற்காக ‘ஷாம்பெய்ன்’ பாட்டிலை விமான பணிப்பெண் திறந்தார்.
அப்போது அதில் இருந்த ‘கார்க்’ மிகவும் வேகமாக மேலெழும்பி, விமானத்தின் மேற்கூரையை பதம் பார்த்தது.
அங்கு ஆக்சிஜன் முகமூடிகள் வைக்கப்பட்டிருந்த பகுதி உடைபட்டு, முகமூடிகள் விழுந்தன.
இதனால் விமானத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் போது, விமானம் இத்தாலி வான்பகுதியில் பறந்து கொண்டிருந்தது.
‘கார்க்’ ஏற்படுத்திய களேபரத்தால், விமானத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவியது. உடனே விமானத்தை இத்தாலியில் அவசரமாக தரையிறக்கிய விமானி, பழுதை சரி செய்ய நடவடிக்கை எடுத்தார்.