சிங்கப்பூர் பார்லிமென்ட் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி (பிஏபி) மீண்டும் அமோக வெற்றி பெற்றது. தற்போதைய பிரதமர் லீ லூங் மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
சிங்கப்பூரில் சமீபத்தில் தேர்தல் நடந்தது. சிங்கப்பூரை வடிவமைத்த முன்னாள் பிரதமர் மறைந்த லீ குவான் யூ-வின் மக்கள் செயல் கட்சியும் தொழிலாளர் கட்சியும் மோதின.
இதில் மக்கள் செயல் கட்சி மொத்தம் உள்ள 89 இடங்களில் 83 இடங்களை கைப்பற்றி, அமோக வெற்றி பெற்றது.
தற்போதைய பிரதமரும் முன்னாள் பிரதமர் லீ குவானின் மகனுமான லீ லூங் வெற்றி பெற்று, மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 69.86 சதவீத ஓட்டுகளை அவரது கட்சி பெற்றது.
வெற்றிக்குப் பிறகு பேட்டி அளித்த லீ லூங் கூறியதாவது:
மக்களுக்கு பணிவான நன்றி: என் மீதும், என் கட்சியின் மீதும் சிங்கப்பூர் மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நான் கடன் பட்டவனாகிறேன்.
எதிர்க்கட்சி வலுவாக இருக்கும் புக்கால் கிழக்கு பகுதியிலும் எங்கள் கட்சிக்கு அதிக ஓட்டு கிடைத்தது, மகிழ்ச்சி அளிக்கிறது.
மக்களுக்கு சேவை செய்யவே நாம் தேர்வு செய்யப்பட்டுள்ளோம் என்பதை எம்.பிக்கள் மறந்து விடக் கூடாது. மக்களுக்கு சேவை செய்ய, மேலும் அதிகமாக உழைக்க வேண்டும்.
இனம், மொழி, வயது ஆகியவற்றைக் கடந்து நமக்கு மக்கள் ஓட்டளித்துள்ளனர். அதற்காக மக்களுக்கு எனது நன்றிகள். இவ்வாறு அவர் கூறினார்.