மதுரையில் கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் கிரானைட் குவாரிகளில் உடல்களை தோண்டும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பாக ஹைகோர்ட் உத்தரவுப்படி சட்ட ஆணையர் சகாயம் விசாரணை நடத்தி வருகிறார்.
பல்வேறு கட்ட விசாரணைகளை முடித்துள்ள அவர், தற்போது இறுதிக்கட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த பணியின்போது அவருக்கு மிரட்டல் போன்கள், கடிதங்கள் வந்தன. இதனை தொடர்ந்து சகாயத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சம்பந்தப்பட்ட குவாரிகள் மற்றும் கிரானைட் கற்கள் எடுக்கப்பட்ட பகுதிகளில் சகாயம் விசாரணை நடத்தி முடித்திருந்தார். அதன் பின்னர் அவரிடம் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் மனு கொடுத்து இருந்தனர்.
இதன் அடிப்படையிலேயே அவர் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் மேலூரை அடுத்த ஒத்தக்கடை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் மலையில் உள்ள சமணர் படுகைக்கு சென்று மீண்டும் ஆய்வு செய்தார்.
அப்போது சேதப்படுத்தப்பட்டுள்ள பழமையான கல்வெட்டுகள், பிராமி எழுத்துக்கள் போன்றவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து பி.ஆர்.பிக்கு சொந்தமான பாலீஸ் தொழிற்சாலையிலும் அவர் சோதனை நடத்தினார்.
இதற்கிடையில் பி.ஆர்.பி கிரானைட் குவாரியில் டிரைவராக வேலை பார்த்த கீழவளவை சேர்ந்த சேவற்கொடியான் என்பவர் ஏற்கனவே சகாயத்திடம் ஒரு புகார் மனு கொடுத்திருந்தார்.
அதில், பி.ஆர்.பி. கிரானைட் குவாரி தரப்பினர் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை நரபலி கொடுத்து பின்னர் உடலை ஒரு இடத்தில் புதைத்து விட்டதாக தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தவும், குறிப்பிட்ட இடத்தை தோண்டி பார்க்கவும் சகாயம் குழுவினர் திட்டமிட்டனர்.
இதற்காக அவர்கள் இன்று மேலூரை அடுத்த இ.மலம் பட்டி அருகே உள்ள சின்ன மலம்பட்டி பகுதிக்கு வந்தனர். அங்குள்ள மணிமுத்தாறு ஓடையில், நரபலி கொடுக்கப்பட்டவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டதாக சேவற்கொடியான் தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து அங்கு சகாயம் முன்னிலையில் இன்று பொக்லைன் மூலம் மண் தோண்டப்பட்டது. புதைக்கப்பட்டவர்கள் குறித்த தடயங்கள் எதுவும் கிடைக்குமா என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.