விஸ்வரூபம், உத்தமவில்லன் மற்றும் தூங்காவனம் படங்களை தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுத்த கமல்ஹாசன் அடுத்ததாக மலையாள உலகம் பக்கம் தனது பார்வையை பதித்திருக்கிறார்.
தூங்காவனம் படத்தைத் தொடர்ந்து கமலின் அடுத்த படம் தமிழ், மலையாளம் என ஒரே நேரத்தில் படமாகவிருக்கிறது. மலையாள உலகின் புகழ்பெற்ற இயக்குநர் டி.கே.ராஜீவ் குமார் இந்தப் படத்தை இயக்கவிருப்பதாக செய்திகள் அடிபடுகின்றன.
1989ம் ஆண்டும் டி.கே. ராஜீவ்குமார் இயக்கத்தில் கமல், ஊர்மிளா, ஜெயராம் நடித்து வெளியான "சாணக்கியன் திரைப்படம் தமிழ், மலையாளம் என 2 மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகி ஹிட்டடித்தது.
சாணக்கியன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் 26 வருடங்கள் கழித்து இருவரும் இந்தப் படத்தின் மூலமாக இணைகிறார்கள் என்பது, திரையுலகில் கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்தப் படத்தை இயக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்து வருவதாகவும் விரைவில் படம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் கூறுகின்றனர்.
அநேகமாக இந்த வார இறுதிக்குள் இந்தப் படம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்று தகவல் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
டி.கே. ராஜீவ்குமார் தான் இயக்கிய ஜலமர்மரம் படத்திற்காக தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாபநாசம் படத்தின் வெற்றி கமலை மலையாளக் கரையோரமாக இழுக்கிறதா?