பெரும்பாலான நடிகைகள் தங்களுக்கு எத்தனை வயது என்று சொல்ல விருப்பப்படுவதில்லை; ஆனால் வித்யாபாலனுக்கு அத்தகைய தயக்கங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. 'எனக்கு, 36 வயது' என்று தைரியமாகச் சொல்கிறார்.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்தித் திரையுலகில், நடிகை என்னும் முத்திரையைத் தாண்டி, ஒரு பெண் என்பதையும் உணர்த்தியவர் வித்யா பாலன்.
இளமையையே பெரிதாகக் கருதும் சமூகத்தில், இளமையாகவே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நடிகைகளின் மத்தியில், தன் வயதைக் கூறுவதில் அவர் எந்தத் தயக்கமும் காட்டவில்லை.
இது குறித்துப் பேசியவர், "இது நடிகைகளுக்கு மட்டுமே என்று எதுவும் இல்லை. நாம் எல்லோருமே இளமையை விரும்பும் சமூகத்திலேதான் இருக்கிறோம் என்று நினைக்கிறேன்.
எல்லாப் பெண்களுக்கும் தன்னை இளமையாகக் காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஆனாலும் எனக்கு 36 வயது என்பதைச் சொல்வதில் பெருமைப்படுகிறேன்.
ஆனால் ஒரு விஷயம் எனக்குக் கவலை அளிக்கிறது. இப்போது ஆசைகள் அனைத்துமே வயதோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன. ஆனால் வயது என்பது வெறும் எண் மட்டுமே. வயதைப் பற்றி அதற்கு மேல், எதுவும் யோசிக்கத் தேவையில்லை.
எனக்கு படங்களின் எண்ணிக்கை குறித்துக் கவலையில்லை. பாக்ஸ் ஆபிஸ் தோல்விகளைக் காட்டிலும், படத்தில் சரியாக நடிக்கவில்லை என்றால்தான் வருத்தப்படுவேன்" என்று கூறியிருக்கிறார்.
நோ ஒன் கில்ட் ஜெசிக்கா, பா, இஷ்கியா உள்ளிட்ட படங்களில் தன்னுடைய சினிமா ரசிகர்களைக் கவர்ந்த வித்யா பாலன், டர்ட்டி பிக்சர் படத்தில் அனைவரையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.