4-வது எழுத்தாளராக விருதை உதறினார் சாரா ஜோசப்!

நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதை கண்டித்து சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிப்பதாக பெண்ணியம் போற்றும் மலையாள எழுத்தாளர் சாரா ஜோசப் அறிவித்துள்ளார். 

எழுத்தாளர் சச்சிதானந்தன் (இடது); எழுத்தாளர் சாரா ஜோசப் (வலது)

இதே காரணத்துக்காக, சாகித்ய அகாடமி உறுப்பினர் பதவியை துறப்பதாக எழுத்தாளர் சச்சிதானந்தன் கூறியிருக்கிறார். 

எழுத்தாளர் நயன்தாரா சேகல், கவிஞர் அசோக் வாஜ்பேயி, உருது நாவலாசிரியர் ரகுமான் அப்பாஸை தொடர்ந்து மலையாள எழுத்தாளர் சாரா ஜோசப் சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிக்கும் முடிவை எடுத்துள்ளார். 

மலையாள எழுத்துலகின் பல்வேறு படைப்பாளர்களும் தங்களது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியுள்ளனர். 

இது குறித்து திருச்சூரில் இன்று (சனிக்கிழமை) பேசிய அவர், "அலாயுதே பெண்மக்கள் ( Alaahayude Penmakkal) என்ற எனது நாவலுக்கு கடந்த 2003-ம் ஆண்டு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதையும் அதனுடன் வழங்கப்பட்ட ரூ.50,000 பரிசுத் தொகையையும் திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளேன். 

நாட்டில் சகிப்புத்தன்மை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. விரும்பிய உணவை மக்கள் உண்பதற்கும், நேசிக்கும் நபரை ஒருவர் திருமணம் செய்யவும் 

 

இங்கு சுதந்திரம் இல்லை. எனவே, பெருகி வரும் சகிப்புத்தன்மையின்மையை கண்டித்து சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிப்பதாக முடிவு செய்துள்ளேன்" என்றார். 

இதேபோல், மலையாள கவிஞர் கே.சச்சிதானந்தன் சாகித்ய அகாடமி உறுப்பினர் பொறுப்பை துறப்பதாக அறிவித்துள்ளார். இவர் சாகித்ய அகாடமியின் முன்னாள் செயலாளரும்கூட. சாகித்ய அகாடமி, 

எழுத்தாளர்கள் கொள்கைகளுக்கு துணை நிற்கவும்; அரசியல் சாசனம் வழங்கிய கருத்துச் சுதந்திரத்தை பேணவும் தவறிவிட்டது என்பதால் பதவியை துறப்பதாக அவர் கூறியுள்ளார். 

முன்னதாக, கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி கொலையை கண்டித்து சாகித்ய அகாடமி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சச்சிதானந்தன் வலியுறுத்திவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சாகித்ய அகாடமிக்கு அவர் எழுதியுள்ள விலகல் கடிதத்தில், "நாடு முழுவதும் சுதந்திரமான சிந்தனையாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டுவரும் நிலையில், சம்பிராதாயத்துக்காக மட்டும் இரங்கல் கூட்டங்களை சாகித்ய அகாடமி ஒருங்கிணைப்பது போதுமானது அல்ல. 

 

எனவே, சாகித்ய அகாடமியின் அனைத்து உறுப்புகளின் உறுப்பினர் பதவியையும் துறக்கிறேன். இது ஒரு அரசியல் சார் நிகழ்வு என்று மட்டுமே நீங்கள் நினைத்தீர்கள் என்றால். 

அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். என்னைப் போன்ற எழுத்தாளர்களர்களுக்கு சமீபத்தைய நிகழ்வுகள் சுதந்திரமாக சிந்தித்து, எழுதி, வாழ்வதற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலாகவே தோன்றுகிறது. 

விவாதங்களை ஒடுக்க அதன் ஆதாரங்களை நிர்மூலமாக்குவது ஜனநாயக நெறியாகாது. இதுவரை சாகித்ய அகாடமி எனக்கு அளித்த கொடைகள் அனைத்துக்கும் நன்றி தெரிவிக்கிறேன். 

ஆனால், ஒரு பொறுப்புள்ள குடிமகனாக, மனசாட்சியுடைய எழுத்தாளனாக என்னால் சாகித்ய அகாடமி பொறுப்புகளில் தொடர முடியாது. எனவே உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் என்னை விலக்கிக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார். 

இதற்கிடையில், கடந்த ஆண்டு சாகித்ய விருது பெற்று மலையாள எழுத்தாளர் சுபாஷ் சந்திரன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இன்னும் ஓரிரு நாட்களில் சாகித்ய அகாடமி நல்லதொரு முடிவு எடுக்காவிட்டால் நான் பெற்ற சாகித்ய விருதை திருப்பி அளிக்கலாமா என முடிவு செய்துள்ளேன்" என்றார். 

சிறுகதை எழுத்தாளர் பி.கே.பாரக்கடவு, சாகித்ய அகாடமி பொதுக்குழு உறுப்பினர் பதவியை தான் உடனடியாக ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார்.

இலக்கிய விமர்சகர் கே.எஸ்.ரவிக்குமாரும், சாகித்ய அகாடமி பொதுக்குழுவில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். 

முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை), எழுத்தாளர் சசி பாண்டே சாகித்ய அகாடமி குழுவிலிருந்து விலகினார். நாட்டில் பெருகி வரும் சகிப்புத் தன்மையற்ற போககுக்கு அகாடமி மவுனம் சாதிப்பதை எதிர்த்து அவர் தனது பொறுப்பை உதறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:
Privacy and cookie settings