நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், வாக்குப்பதிவு சுமார் 10 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட் எப்பாஸ் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. வாக்குப்பதிவு மையத்துக்கு வெளியே இரு அணியினரும் நின்று, ஓட்டு போட வந்த நடிகர்,
நடிகைகளிடம் தங்கள் அணி வேட்பாளர்களின் பெயர்களை கொண்ட துண்டு சீட்டை கொடுத்துக் கொண்டிருந்தனர். வயதான பெண் உறுப்பினர் ஒருவர் ஓட்டு போட வந்தபோது, இரு அணியினரும் சீட்டுகளை கொடுத்துள்ளனர்.
விஷால் அணியினர் கொடுத்த சீட்டை சரத் அணியினர் வாங்கிக் கொண்டு, அவர்களது சீட்டை கொடுத் துள்ளனர். இதைப் பார்த்த விஷால் அணியில் இருக்கும் நடிகை சங்கீதா, மீண்டும் அந்தப் பெண்ணிடம் சீட்டை கொடுத் திருக்கிறார்.
இதனால் சரத்குமா ருக்கும் சங்கீதாவுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைப் பார்த்த விஷால் ஓடிவந்தார். தள்ளுமுள்ளுவில் ஒருவர், விஷாலின் சட்டையைப் பிடித்து இழுத்துள்ளார்.
அதில் அவரது சட்டை கிழிந்தது. விஷால் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானப் படுத்தினர்.
விஷால் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளிய வைத்தனர். பின்னர் அவரை வெளியே அழைத்து வந்து கேரவனில் சிறிது நேரம் ஓய்வெடுக்க வைத்தனர்.
விஷால் தாக்கப்பட்டதாக தகவல் பரவியதும் அங்கு பரபரப்பு கூடியது. கூட்டத்தினரை போலீ ஸார் கட்டுப்படுத்தினர். நடந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரும் கூறியதாவது:
விஷால்:
என் மீது தாக்குதல் நடந்தால் தாங்கிக் கொள்வேன். ஆனால், நடிகை மீது தாக் குதல் நடத்தியுள்ளனர். யார் தாக்கினார்கள் என்று சொல்ல மாட்டேன். தேர்தலை நிறுத்த சதி செய்கின்றனர். மாலை 5 மணிவரை இங்கேதான் இருப்பேன். எங்கேயும் செல்ல மாட்டேன்.
சரத்குமார்:
எனக்கும் சங்கீதா வுக்கும் வாக்குவாதம் நடந்தது. இதனால் உள்ளுக்குள் தள்ளு முள்ளு நடந்தது உண்மைதான். நான் யாரையும் அடிக்கவில்லை. வடிவேலு சும்மா காமெடிக்காக பேசுகிறார்.
நான் அடித்ததாக தகவல் பரவியதால் இந்த விளக்கம் அளிக்கிறேன். என்ன நடந்தது என்பது குறித்து நீதிபதி பத்மநாபன் விளக்கம் அளிப்பார். விஷால் ஒரு நல்ல நடிகர். அவர் இன்று நன்றாக நடித்தார்.
ராதாரவி:
விஷால் மீது யாரும் தாக்குதல் நடத்தவில்லை. சிறு சலசலப்புதான் நடந்தது. ஒரு நாடகத்தை விஷால் அரங் கேற்றிவிட்டார். தேர்தலில் நாங் களே வெற்றி பெறுவோம். வாக்குறுதிகளை நிறைவேற்று வோம்.
நடிகை சங்கீதா:
சரத்குமாருடன் கிச்சா ரமேஷ், சிசர் மனோகர் மற்றும் அவருடைய உதவியாளர் இருக்கிறார்கள். எங்களது அணியினர் அளிக்கும் சீட்டை பறிப்பதே அவர்களுக்கு வேலையாகி இருந்தது.
நான் மீண்டும் சீட்டை கொண்டுபோய் கொடுத்தபோது, ‘உன்னை எல்லாம் யார் உள்ளே விட்டது’ என்று கேட்டனர். நான் செயற்குழு உறுப்பினர் வேட்பாளர் என்று தெரிவித்தேன்.
அப்போது சரத்குமார் சார் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி, அடிக்க வந்தார். அப்போது விஷால், விக்ராந்த் அனைவரும் என்னை பாதுகாத்து வெளியே அனுப்பினர். அவர்களது முக்கிய எண்ணமே விஷாலை தாக்க வேண்டும் என்பதுதான்.
கிச்சா ரமேஷ் என்பவர் சரத்குமார் கட்சியில் உள்ளவர். அவருக்கு நடிகர் சங்கத்தில் என்ன வேலை? இதுபோன்ற பண்பற்ற செயலை ஒரு தலைவரிடம் இருந்து நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
வடிவேலு:
சங்கீதாவை சரத்குமார் தரக்குறைவாக பேசினார். அதை தட்டிக் கேட்டபோது சரத்குமார் அணியில் இருந்த தாடி வைத்த ஒருவர் விஷாலின் சட்டையைப் பிடித்து தள்ளினார். அவர் மீது தாக்குதல் நடத்தினர்.
தேர்தலை நிறுத்த சரத்குமார் அணியினர் திட்டமிடுகின்றனர். அவர்களுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. சரத்குமார் மீது புகார் கொடுப்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்வோம்.