முறைகேடு புகார், தொடர்ச்சியாக எழுந்த விமர்சனங்களால் எஸ்பிஐ சினிமாஸ் பேசி, புதிதாக கட்ட இருந்த கட்டிட ஒப்பந்தத்தை ஏற்கெனவே ரத்து செய்துவிட்டோம் என்று தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவர் சரத்குமார் பேசினார்.
இது குறித்து இன்று மாலை சென்னையில் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து கூறியது:
''நடிகர் சங்கத்தில் 15 ஆண்டுகளாக நேர்மையாக பணியாற்றினேன். நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பல உதவிகளை செய்துள்ளேன். நலிந்த கலைஞர்களுக்கு உதவியுள்ளேன். நாங்கள் நியாயமாகவே நடந்திருக்கிறோம்.
ஆனால், விஷால் அணியினர் கூறிய புகார்கள் என்னை மனதளவில் காயப்படுத்தின. என் மீதான குற்றச்சாட்டுகள், முறைகேடு புகார்களில் உண்மையில்லை. என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களுடன் விளக்கம் அளித்தேன்.
முறைகேடு புகார், தொடர்ச்சியாக எழுந்த விமர்சனங்களால் எஸ்பிஐ சினிமாஸ் பேசி, புதிதாக கட்ட இருந்த கட்டிட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டோம். கடந்த செப்டம்பர் 29-ம் தேதியே இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
ஒப்பந்தம் ரத்து விஷயத்தை தேர்தல் முடிவுக்குப் பிறகு அறிவிக்கலாம் என்று இருந்தேன். ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட ஆவணத்தை நடிகர் சங்கத் தலைவரிடம் அளிப்பேன்.
நான் இதை முன்கூட்டியே இந்தத் தகவலை வெளியிட்டிருந்தால், அது எதிரணியினர் தங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றியாகச் சொல்லியிருப்பார்கள்.
வெற்றி, தோல்வியை என் வாழ்க்கையில் நிறைய சந்தித்துவிட்டேன். பொது வாழ்க்கையில் தொடர்ந்து பயணிக்கிறேன்.தேவைப்பட்டால் நடிகர் சங்கப் பணிகளுக்கு என்னைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்த 10 நாட்களில் அனைத்து கணக்கு வழக்குகளையும் ஒப்படைப்பேன்'' என்று சரத்குமார் தெரிவித்தார்.