தேதிகள் பிரச்சினை காரணமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்தில் இருந்து விலகியிருக்கிறார் கார்த்தி. மணிரத்னம் படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கார்த்தி, துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து நித்யா மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் படமாக்க திட்டமிட்டார் மணிரத்னம். துல்கர் சல்மான் தேதிகள் பிரச்சினை காரணமாக விலகியதால் தெலுங்கு நடிகர் நானி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
தற்போது தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரை இப்படத்தின் இணை தயாரிப்பாளராக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் இயக்குநர் மணிரத்னம். கடந்த வாரம் இப்படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலகினார்.
இந்நிலையில், யாருமே எதிர்பாராத விதமாக இப்படத்தில் விலகியிருக்கிறார் கார்த்தி. மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிவிட்டு, அவருடைய படத்திலேயே நாயகன் என்று வந்த வாய்ப்பை விடக்கூடாது என நினைத்து இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் கார்த்தி.
ஜனவரியில் படப்பிடிப்பு என்று மணிரத்னம் திட்டமிட்டு வந்தார். ஆனால், 'தோழா', 'காஷ்மோரா' என்ற இரு பெரிய பட்ஜெட் படங்கள் இருப்பதால் ஜனவரியில் தேதிகள் ஒதுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து மணிரத்னத்துக்கு போன் பண்ணிய கார்த்தி, தனது நிலையை எடுத்துக் கூறி, படத்திலிருந்து விலகிவிட்டார்.
தற்போது அவருடைய வேடத்திற்கு ஃபகத் பாசிலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தேதிகள் சரியாக அமையும் பட்சத்தில் அவர் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்கிறது தயாரிப்பு தரப்பு.
அடுத்தாண்டு துவங்க இருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.