குழந்தைகளே! மற்ற நாடுகளின் சுதந்திரத்தை நாம மதிக்கிறோம். நாமும் சுதந்திரமாக இருக்க விரும்புறோம். நாம சுதந்திரமா இல்லைன்னா, நம்மள யாராவது மதிப்பார்களா?
நாட்டின் பாதுகாப்பை மனதில் வைத்து வேலை செய்த முன்னோடிகளான விஞ்ஞானிகளோடு வேலை செய்கிற அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது.
இந்தியாவோட ராக்கெட்டுகளை வானத்தில் ஏவுகிற இஸ்ரோ நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கு நான் வேலை பார்த்தேன். இந்தியாவோட முதல் ராக்கெட்டை ஏவுகிற திட்டத்தின் இயக்குநரா நான் இருந்தேன். அப்போதுதான் முதலாவது செயற்கைக்கோள் ரோகிணி வெற்றிகரமாக வானத்தில் ஏவப்பட்டது.
அதுக்கப்புறம் நாட்டின் பாதுகாப்புக்கு அவசியமான ஏவுகணைகளை உருவாக்கும் பணியில் சேர்ந்தேன். இந்தியா இப்போ வளரும் நாடு அல்ல, வளர்ந்த நாடு என்று உலகத்துக்கு நிரூபிப்பது போல இருந்தன அந்தப் பணிகள். அப்போதுதான் 'நான் ஒரு இந்தியன்' என்ற பெருமிதம் எனக்கு அதிகமானது.
அப்போது நாங்கள் மிகவும் லேசான ஒரு கார்பன் பொருளைக் கண்டுபிடித்தோம். ஒருநாள் நிஜாம் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிகல் சயின்ஸ் நிறுவனத்திலிருந்து ஒரு டாக்டர் என்னைப் பார்க்க வந்திருந்தார்.
எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் அவர். எனது ஆய்வகத்திலிருந்த லேசான பொருளை அந்த டாக்டர் தூக்கிப் பார்த்தார். அதன் பிறகு அவரது மருத்துவமனைக்கு என்னை அழைத்துப்போனார்.
அங்கே சின்னஞ் சிறுமிகளும் சிறுவர்களும்கூட நோயாளிகளாக இருந்தார்கள். அவர்கள் தங்களது உடலில் மூன்று கிலோவுக்கு அதிகமான எடைகொண்ட ‘காலிபர்’ எனும் கருவிகளைக் கால்களில் தாங்கியபடி இருந்தார்கள்.
அவற்றை நாங்கள் 300 கிராம் எடையுள்ளதாக மாற்றினோம். அதைப் போட்டுக்கொண்டு கஷ்டமில்லாமல் சுலபமாக நடந்தார்கள். அந்தக் குழந்தைகளால் அதை நம்பவே முடியவில்லை. அவர்களுடைய அம்மா, அப்பா மகிழ்ச்சியாக இருந்தார்கள். எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
நம் தேசம் ஒரு மகத்தான தேசம். நமது சாதனைகளையும் ஆற்றல்களையும் நாம்தானே அங்கீரிக்க வேண்டும். அற்புதமான சாதனைச் செய்திகள் நம்மிடம் உள்ளன. பால் வளத்தில் நாம்தான் உலகில் முதல் இடம்.
தொலைதூர உணர்வு கொண்ட செயற்கைக்கோள்களை உருவாக்குவதில் நாமே முதல் இடம். கோதுமை, அரிசி உற்பத்தியில் இரண்டாம் இடம்.
ஒரு முறை இஸ்ரேல் நாட்டில் பேப்பர் படித்தேன். பாலைவனத்தை ஐந்தாண்டுகளில் சோலையாக்கிய ஒரு சாதனை மனிதன் பற்றிய செய்தி இருந்தது. உள்ளேதான் சண்டைகள், சச்சரவுகள் பற்றிய செய்திகள் இருந்தன. ஆனால், இந்தியாவில் தலைகீழாக உள்ளது.
பதினான்கு வயதுச் சிறுமி ஒருத்தியிடம் ‘உன் குறிக்கோள் என்ன?' என்று கேட்டேன். ‘வளர்ச்சியடைந்த இந்தியாவில் வாழ விரும்புகிறேன்' என்று சொன்னாள்.
நமது நாட்டைப் பற்றி பல புகார்கள் கூறுவார்கள். ஆனால், அப்படி புகார் கூறுபவர்கள்கூட வெளிநாடுகளுக்கு சென்றால் மிகவும் கட்டுப்பாடாக நடந்துகொள்வார்கள். அசுத்தப்படுத்த மாட்டார்கள். அதேமாதிரி உள்நாட்டில் நடந்துகொண்டால் என்ன?
யாரோ வந்து நாட்டின் பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து வைப்பார்களா? நாமே நமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள ஆரம்பித்தால் என்ன? நன்றாக யோசித்துப் பாருங்களேன்!
(மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஹைதராபாத் பள்ளிக் குழந்தைகள் மத்தியில் பேசியது)