கமல்ஹாசன் தன் யோசனைகளை வெளியே சொல்லாமல் வைத்துக் கொள்வது நல்லது என அவருடைய அண்ணன் சாருஹாசன் தெரிவித்திருக்கிறார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க வந்த கமல்ஹாசன், பத்திரிகையாளர்கள் மத்தியில் "தென்னிந்திய நடிகர் சங்கம் இந்திய நடிகர் சங்கமாக மாற வேண்டும்" என்று பேசினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் அவருடைய அண்ணன் சாருஹாசன் தனது ஃபேஸ்புக் பதிவில், "நான் நடிகர் சங்க வாக்குச்சாவடி வரை நடக்க முடியாதவன். தேர்தலை தொலைக்காட்சி மூலம்தான் பார்க்கிறேன். ஜெயிப்பவர்களுக்கு ஒரு பெரிய சுமை காத்திருக்கிறது.
அதைத் தாங்கும் திறமை இருக்கும்படி வாழ்த்துகிறேன். வாழ்த்த வயது மட்டும்தான் இருக்கிறது. வளர்க்கும் தகுதி இல்லை. ரஜினிகாந்த் தமிழ் நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றச் சொல்லிவிட்டு போய்விட்டார்.
பின்னால் வந்த கமல்ஹாசன் செளத் இண்டியன் ஆர்டிஸ்ட் அசோசியேஷனை இந்திய நடிகர் சங்கம் என்று மாற்ற இன்னொரு யோசனை சொல்கிறார்.
இன்றைய சினிமா ரசிகர்கள் “இந்த உலகநாயகனின் தந்தை சுதந்திர போராட்ட வீரராமே? இன்றைய ஆட்சியில் உள்ள லஞ்ச ஊழலுக்கு சுதந்திரம்தான் காரணம். வெள்ளையர்களை திரும்ப அழையுங்கள் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்.
கமல் தன் யோசனைகளை வெளியே விடாமல் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது என் யோசனை... ஒரு வேளை சொல்லித்தான் ஆகவேண்டும் என்று நினைத்தால்.....'இந்தியன் ஆர்டிஸ்ட் அசோசியேஷன் என்று வைத்திருந்தால் நல்லாயிருக்கும்/' என்று மாற்றிக் கொள்ளவும்'' என்று சாருஹாசன் தெரிவித்துள்ளார்.