தேனியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த மாணவி தற்போது மருத்துவம் படிக்க ரஷ்யா சென்றுள்ளார். நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்த லட்சுமி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தனது 2 மகள்களுடன் தேனி பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தார்.
பின்னர் அந்த பெண்ணை பழனிசெட்டிபட்டியில் உள்ள அவருடைய உறவினர்கள் அழைத்துச் சென்றதோடு, 2 மகள்களான கார்த்திகா, சர்மிளாவை ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்தனர். அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், கார்த்திகா 8-ம் வகுப்பிலும், சர்மிளா 6-ம் வகுப்பிலும் சேர்க்கப்பட்டனர்.
கார்த்திகா 10ம் வகுப்பு தேர்வில் 454 மதிப்பெண்கள் எடுத்தார். பின்னர் கடந்த கல்வி ஆண்டில் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 892 மதிப்பெண்கள் எடுத்தார்.
சென்னையை சேர்ந்த ஒரு கல்வி அமைப்பு ரஷ்யாவில் உள்ள மருத்துவக்கல்லூரியில் படிக்க ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்தை சேர்ந்த ஒரு மாணவியை தெரிவு செய்து 50 சதவீத கல்விக்கட்டண சலுகை அளித்து வருகிறது.
தற்போது அந்த அமைப்பு மூலம் கார்த்திகா ரஷ்ய மருத்துவக்கல்லூரியில் படிக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். கார்த்திகா இது குறித்து கூறுகையில், நான் சங்கரன்கோவிலில் 4-ம் வகுப்பு வரை படித்தேன்.
பின்னர் அம்மாவுடன் சேர்ந்து நானும், என் தங்கையும் பிச்சை எடுத்தோம். மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த எங்கள் தாயாரை, உறவினர் வீட்டில் சங்கிலியால் கட்டி வைத்திருந்தனர்.
எனது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான மறுநாள் எங்கள் தாயார் இறந்து விட்டார். நான் ரஷ்யாவிற்கு அணிந்து செல்ல நல்ல ஆடைகள் கூட கிடையாது. எனக்கு புதிய ஆடைகள் வாங்கிக் கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் பலர் மருத்துவப் படிப்புக்கு தேவையான புத்தகங்களை வாங்கிக் கொடுத்தனர்.
எனக்கு ஆட்சியர் ஆக வேண்டும் என்று ஆசை உள்ளது. நான் பணியாற்றும் இடங்களில் பிச்சைக்காரர்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதே எனது லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.