இளம்பெண் ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அவரது தாய் இந்திராணி அபாய கட்டத்தைத் தாண்டியுள்ளதாகவும், மருத்துவமனையில் இருந்து அவர் 48 மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மும்பையின் பைகுலா சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திராணி நேற்று முன்தினம் அதிக மாத்திரைகளை உட்கொண்டதால் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மும்பை ஜே.ஜே. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அளவுக்கு அதிகமாக உட்கொண்ட மாத்திரைகளை இந்திராணியின் வயிற்றில் இருந்து டாக்டர்கள் வெளியேற்றி வருகின்றனர். அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஜே.ஜே. மருத்துவமனையின் டீன் டி.பி.லஹானே ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறும்போது, "அவர் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டார். தற்போது அவருக்கு முழு நினைவு திரும்பியிருக்கிறது.
அவரிடம் பேச்சுக்கொடுத்தால் பதில் அளிக்கிறார். அவருக்குத் தண்ணீர் கொடுத்தோம். அவர் அதைக் குடித்தார். அவரது நிலை இப்போது தேறியிருக்கிறது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும். அடுத்த 48 மணி நேரத்தில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" என்றார்.
அதிகமான மாத்திரைகள் உட்கொண்டதாக வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அது குறித்து அனைத்து விவரங்களும் இரண்டு நாட்களில் விரிவாக விளக்கப்படும். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது, அவரது மூளை இயல்பு நிலையில் இருப்பது தெரியவந்தது.
ஓவர்டோஸ் மருந்துகளை எடுத்துக்கொண்டதாக கருதியே அவருக்கு சிகிச்சை அளித்தோம். அது பலனளித்துள்ளது என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்ல முடியும்" என்றார் லஹானே.
ஸ்டார் இந்தியா முன்னாள் தலைமை செயல் அதிகாரி பீட்டர் முகர்ஜியின் 2-வது மனைவி இந்திராணி. அசாம் மாநிலத்தை சேர்ந்த அவர், தனக்கு ஏற்கெனவே 2 திருமணங்கள் நடந்ததை மறைத்து 3-வதாக பீட்டர் முகர்ஜியை திருமணம் செய்தார்.
முதல் கணவருக்குப் பிறந்த மகள் ஷீனா போராவை (24) தங்கை என்று கூறி தன்னுடன் தங்க வைத்தார். பின்னர் கருத்து வேறுபாடு எழுந்ததால், ஷீனாவை இந்திராணி கொலை செய்ததாக புகார் எழுந்தது.
இதற்கு 2-வது கணவர் சஞ்சீவ் கன்னா மற்றும் கார் டிரைவர் ஷியாம் ராய் ஆகியோரும் உதவியுள்ளனர். இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.
மும்பையின் பைகுலா சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திராணி நேற்று முன்தினம் அதிக மாத்திரைகளை உட்கொண்டதால் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மும்பை ஜே.ஜே. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அளவுக்கு அதிகமாக உட்கொண்ட மாத்திரைகளை இந்திராணியின் வயிற்றில் இருந்து டாக்டர்கள் வெளியேற்றினர். அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட இந்தி ராணிக்கு அதிக அளவு தூக்க மாத்திரைகள் கிடைத்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்த மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
இந்திராணியின் தாய் துர்கா ராணி போரா (82), அசாம் மாநிலம் குவா ஹாட்டியில் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார். அந்த தகவல் கேட்டதில் இருந்தே இந்திராணி மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
அதற்காக அவருக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இந்திராணியைப் பார்க்க அவருடைய குடும்பத்தில் இருந்து யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.