கேரளாவில் மாட்டிறைச்சி விருந்து விழா நடத்திய 6 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசம் தாத்ரி பகுதியில் பசுவை கொன்று சாப்பிட்டதாக பரவிய வதந்தியால் இக்லாக் என்பவரை வன்முறை கும்பல் அடித்துக் கொன்றது.
இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கேரள மாநிலம் திருச்சூரில் செயல்படும் ஸ்ரீ கேரள வர்மா கல்லூரியைச் சேர்ந்த இந்திய மாணவர் கூட்டமைப்பு சார்பில் கடந்த 1-ம் தேதி கல்லூரி வளாகத்தில் மாட்டிறைச்சி விருந்து நடைபெற்றது.
அதற்கு அகில பாரத வித்யார்த்தி பரிஷத் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இந்திய மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த அடை யாளம் தெரியாத 12 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் 6 மாணவர்களை நேற்று சஸ்பெண்ட் செய்தது. இது குறித்து கல்லூரி முதல்வர் லதா கூறியதாவது: எங்கள் கல்லூரி வளாகத்தில் அசைவ உணவு வகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை சில மாணவர்கள் மீறியுள்ளனர்.
சம்பவத்தின்போது எடுக்கப் பட்ட புகைப்படங்களின் மூலம் தவறிழைத்த 6 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு சஸ் பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாங்கள் மாணவர் போராட்டத் துக்கு எதிரானவர்கள் இல்லை. எனினும் கல்லூரி வளாகத்தில் நடத்தை விதிகளை மீறுவதை அனுமதிக்க முடியாது. இந்த நட வடிக்கை மற்ற மாணவர்களுக்கு படிப்பினையாக அமையும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஸ்ரீகேரள வர்மா கல்லூரியை கொச்சியை ஆண்ட மன்னர் கட்டி னார். தற்போது இந்த கல்லூரி கொச்சி தேவஸ்தான அறக் கட்டளையின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.