கேரளாவில் நடிகை கே.ஆர்.விஜயா விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டதாக வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தியாவில் பரபரப்பு ஏற்பட்டது. தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை தான் நலமுடன் இருப்பதாக கூறியுள்ளார் கே.ஆர். விஜயா.
பழம்பெரும் நடிகை மனோராமா கடந்த சனிக்கிழமையன்று இரவு மரணமடைந்தார்.
அவரது இறுதிச்சடங்குகள் ஞாயிறு மாலை நடைபெற்றது. திரையுலகினரும், சினிமா ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்திருந்த நிலையில் மகாளய அமாவாசை தினமான நேற்று வாட்ஸ்அப் மூலம் ஒரு வதந்தி பரவியது.
கேரளாவில் விபத்து ஏற்பட்டதாகவும், இதில் கே.ஆர் விஜயா உயிரிழந்து விட்டதாகவும் தகவல் பரவியதும் திரை உலகில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து பலரும் கே.ஆர்.விஜயாவுடன் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர். அப்போது பேசிய கே.ஆர்.விஜயா, நான், இப்போது கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வசித்து வருகிறேன். எனக்கு விபத்து எதுவும் நடக்கவில்லை. நல்ல உடல் நலத்துடன் இருக்கிறேன்.
மகாளய அமாவாசை அன்று என்னை பற்றி வதந்தி பரவியதை திருஷ்டி கழிந்து விட்டதாக எடுத்துக்கொண்டேன். என் உடல் நலத்தில் அக்கறை கொண்டு விசாரித்ததற்காக நன்றி என்று கூறியுள்ளார்.