"தவறான குற்றச்சாட்டுக்கு வெட்கித் தலைகுனியுங்கள். சரத்தை நினைத்து பெருமையடைகிறேன்" என ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் சங்க கட்டிடம் தொடர்பான பிரச்சினை பெரிய அளவில் வெடித்து, நடிகர்கள் விஷால் அணி, சரத் அணி என இரண்டாகப் பிரிந்து நடிகர் சங்கத் தேர்தலை சந்தித்தனர். ஞாயிறு அன்று நடைபெற்ற தேர்தலில் விஷால் அணி, போட்டியிட்ட அனைத்து இடங்களையும் கைப்பற்றி பெரிய வெற்றி பெற்றது.
தேர்தல் அன்று தோல்வியை ஒப்புக்கொண்டு பரஸ்பரம் வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டாலும், நேற்று நடிகர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, "நடிகர் சங்க கட்டிடத்துக்காக எஸ்.பி.ஐ. சினிமாஸுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை தேர்தலுக்கு முன்பே ரத்து செய்துவிட்டோம்" என கூறினார்.
மேலும், "இதை முன்கூட்டியே வெளியிட்டிருந்தால், எதிரணியினர் தங்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாக அதை சொல்லியிருப்பார்கள் என்பதால் முதலில் சொல்லவில்லை" என்றும் கூறினார்.
இதற்கு பதிலளிகும் வகையில், "நடிகர் சங்க கட்டிடம் தொடர்பாக ஒப்பந்தம் போட்டபோது, பொதுக் குழுவை கூட்டி முடிவெடுத்தவர்கள், அதை ரத்து செய்யும்போது பொதுக்குழுவை கூட்டாதது ஏன்?" என்று சரத்குமாருக்கு நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "தவறான குற்றச்சாட்டுக்கு வெட்கித் தலைகுனியுங்கள். சரத்தை நினைத்து பெருமையடைகிறேன்" என்று பகிர்ந்துள்ளார்.
தேர்தல் முடிந்து நடிகர்கள் அனைவரும் ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும் என பலரும் வலியுறுத்திவரும் சூழ்நிலையில், ராதிகாவின் இந்த ட்வீட்டால் மீண்டும் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.