வாட்ஸ்ஆப் பயனாளிகள், இனிமேல் தங்கள் மெசேஜ், புகைப்படங்களை ஸ்மார்ட் போனில் சேமித்து வைப்பது எப்படி என்று கவலை கொள்ளத் தேவையில்லை.
வாட்ஸ்ஆப் நிறுவனம், ஆண்ட்ராய்டு தளத்தை பயன்படுத்தும் பயனர்களுக்கு, தங்கள் தகவல்களை கூகுள் ட்ரைவில் சேமித்துக் கொள்ளும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இது குறித்து, கூகுள் ட்ரைவின் தயாரிப்பு நிர்வாக இயக்குநரான ஸ்காட் ஜான்ஸன் தனது வலைப்பக்கத்தில் பகிர்ந்தது:
'தகவல்கள் அழிந்துபோனால், அவை நினைவுகளாகவே மறைந்துவிடுமே என்று நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை.
ஆண்டிராய்டில் இயங்கும் ஸ்மார்ட் போன்களின் வாட்ஸ்ஆப் அரட்டை, குறுந்தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை கூகுள் ட்ரைவில் சேமித்துப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
அத்தோடு, வேறொரு புதிய சாதனத்துக்கும் அதை இடமாற்றம் செய்துகொள்ள முடியும்.
இந்த புதிய வசதி இன்னும் சில மாதங்களில் நடைமுறைக்கு வரும். ஆகவே வாட்ஸ் ஆப் செட்டிங்க்ஸ் பக்கத்தை அடிக்கடி பரிசோதியுங்கள்". வாட்ஸ்ஆப் நிறுவனமும் இதே தகவலைப் பகிர்ந்துள்ளது.
'உங்களின் மெசேஜ்கள் மற்றும் படங்களை, கூகுள் நிறுவனத்தில் சேமித்து வைக்கலாம்.
உங்களின் செல்பேசி தொலைந்து விட்டாலோ அல்லது நீங்கள் வேறு ஸ்மார்ட்போனுக்கு மாறினாலோ, உங்களின் சாட் தகவல்கள் பத்திரமாக இருக்கும்' என்று தெரிவித்துள்ளது.
புதிய வசதியைப் பயன்படுத்துவது எப்படி?
புதிய அப்டேட்டைத் தரவிறக்கி, பழைய ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதற்கு பிறகு, அரட்டை மற்றும் அழைப்புகள் (Chats and Calls) என்னும் விருப்பத்தைத் தெரிவு செய்து,
தினம் ஒரு முறை, வாரத்துக்கு ஒரு முறை, மாதமொரு முறை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு விருப்பத்தை தேர்ந்தெடுத்து, தகவல்களை சேமிக்க வேண்டும்.
இந்த வசதி வேண்டாம் என்பவர்களுக்கும் ஒரு ஆப்ஷன் கொடுக்கப் பட்டிருக்கிறது. இந்த புதிய வசதி இன்னும் இந்தியாவில் அறிமுகமாகவில்லை.
இந்தியப் பயனாளிகளுக்கு இந்த வசதி எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்ற கேள்விக்கு வாட்ஸ் ஆப் நிறுவனம் எந்த பதிலையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 2014-ல் வாட்ஸ்ஆப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவில் 7 கோடி மாதாந்திர பயனர்கள் உள்ளனர்.
செப்டம்பர் 2015-ன் அறிக்கையின்படி, உலகளாவிய அளவில் 90 கோடி பேர் வாட்ஸ் ஆப் செயலியப் பயன்படுத்தி வருகின்றனர்.