இந்தப் பெயரைக் கேட்டதும் நினைவுக்கு வரும் கவர்ச்சி பிம்பத்தை மாற்றுகின்றன… அவருடனான உரையாடலில் மிதந்த துயரங்களும், வருத்தங்களும், அவரது தன்னம்பிக்கையும்!
மலையாளம், கன்னடம் என இருமொழிகளில் வெளியாகியிருக்கும் ஷகிலாவின் சுயசரிதைப் புத்தகம், தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழிலும் வெளியாக விருக்கிறது. வாருங்கள் பேசுவோம்… சக மனுஷியிடம்!
”சென்னை, தி.நகர்லதான் நான் பிறந்தேன். என் கூட பிறந்தவங்க ஏழு பேர். அப்பா சூதாட்ட கிளப் நடத்தி, நஷ்டமாயிட்டாரு. குடும்பத்துல பசி மட்டும் நிரந்தரமா இருந்துச்சு.
நான் பத்தாவது ஃபெயில் ஆனப்போ, வயசுப் பொண்ணுனுகூடப் பார்க்காம தெருவில் துரத்தித் துரத்தி அடிச்சாரு எங்கப்பா. எதிர் வீட்டுல இருந்த சினிமா மேக்கப்மேன் உமா சங்கர், அப்பாவைத் தடுத்து, ‘படிப்பு வரலைனா என்ன? நடிக்க அனுப்புங்க’னு சொல்லிக் கேட்டாரு.
நிறை மாச கர்ப்பிணியா இருந்த அக்கா, 22 மாசமா கொடுக்காம இருந்த வீட்டு வாடகை, பசிக்கும் வயிறுகள்னு… இந்தச் சூழல்லதான் 16 வயசுல இருந்த எனக்கும், என் தங்கச்சிக்கும் சினிமா வாய்ப்பு வந்தது.
‘பிளே கேர்ள்ஸ்’ படத்துல சில்க்குக்கு தங்கச்சியா நடிக்க, 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தாங்க. தொடர்ந்து கிளாமர் ரோல்கள்தான். வீட்டுல எல்லாரையும் மூணு வேளையும் சாப்பிட வெச்ச அந்தப் பணத்துக்காக, வேற வழி தெரியாம கவர்ச்சியா நடிச்சேன்.
இப்படியே நாலு வருஷம், சின்னச் சின்ன ரோல்கள், கொஞ்சம் கொஞ்சம் பணம்னு ஓடிச்சு. திடீர்னு அப்பா இறந்துட்டார். அதுவரை சினிமா கம்பெனிகளோட என்னோட சம்பளத்தை எல்லாம் அவர்தான் பேசிக்குவார்.
அவர் இல்லாத சூழல்ல என்ன பண்றதுனு தெரியாம சினிமாவை விட்டு சில மாசங்கள் ஒதுங்கி இருந்தேன். கையில இருந்த காசெல்லாம் தீர்ந்ததும், மறுபடியும் வீட்டுக்குள்ள வறுமை வந்திருச்சு.
அந்தச் சமயத்துல ஒரு மலையாள டைரக்டர் எங்க வீட்டுக்கு வந்து, ’17 வயசுப் பையனுக்கு, 30 வயசு பொண்ணு கூட தொடர்பு இருக்குற மாதிரியான படம்னு சொல்லி, ‘ஏ’ சர்டிஃபிகேட் படத்துல நடிக்கக் கேட்டார். நான் திட்டி அனுப்பிட்டேன்.
எங்கம்மா, ‘இப்படி வர்ற வாய்ப்புகளையும் விரட்டிவிட்டா, குடும்பத்தை எப்படி ஓட்டுறது?’னு கேட்ட நிமிஷம் அதிர்ந்தேன், அழுதேன். எங்கம்மாவே சம்பாதிக்கிற மெஷினா என்னைப் பார்த்த துயரம் என் விதியானது.
‘அழுகையும், சிரிப்பும் நடிப்புங்கிற மாதிரி, இதுவும் வெறும் நடிப்புதான். செத்துப்போன ஒரு மனசை சுமந்திருக்கிற உடம்போட நடிப்பு’னு நான் முடிவெடுத்த நாளோட ரணம், எனக்கு மட்டுமே தெரியும்.
20 ஆயிரம் சம்பளம், 10 ஆயிரம் அட்வான்ஸ். கேரளாவுக்கு ஷூட்டிங் போனேன். மலையாளத்துல நான் நடிச்ச படங்கள் ஹிட் ஆக, சம்பளம் லட்சத்துக்கு உயர்ந்தது. மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தினு 200-க்கும் அதிகமான படங்களில் நடிச்சிட்டேன்.
இதனால கோடீஸ்வரி ஆயிட்டேன்னு நினைச்சுக்காதீங்க. இப்போ வரைக்கும் வாடகை வீட்டுலதான் இருக்கேன். குடும்பம் குடும்பம்னே ஓடினேன். ஆனா, இப்போ எனக்காக யாருமே இல்ல.
போஸ்டர்களில் நீங்க பார்த்துதிட்டின ஷகிலா, அவங்க அம்மாவோட கடைசி காலத்துல, அவங்க கழிவுகள் வரை சுத்தம் பண்ணி பார்த்துக்கிட்ட ஒரு பொறுப்பான மகள். ஆனா, என் னோட கடைசி காலத்தில் எனக்குனு யார் இருப்பானு நினைச்சா, அச்சமா இருக்கு…”
விழிகள் மூடித் திறக்கிறார்.
”நான் இந்த வேலையைத் தேர்ந்தெடுத்தது தப்புதான். ஆனா, அதுக்கான சூழலை உருவாக்கின குற்றத்தை என் அப்பா, அம்மா, வாத்தியார்னு எல்லாரும் பகிர்ந்துக்கணும். சின்ன வயசுல தெரு அண்ணா ஒருத்தன், ‘கண்ணை மூடு… லட்டு தர்றேன்’னு சொல்லி, முத்தம் கொடுத்துட்டு ஓடினான்.
அது முத்தம்னுகூடத் தெரியாத அந்த வயசுல அம்மாகிட்ட சொன்னேன். என்ன, ஏதுனு காது கொடுத்துக்கூட கேட்கல அவங்க! ஸ்கூல்ல பனிஷ்மென்ட் டுங்கிற பேர்ல, செக்ஸுவல் ஹராஸ்மென்ட் பண்ணினார் வாத்தியார்.
அப்பவும் அம்மாகிட்ட போய், அதை சரியா சொல்லத் தெரியாம, முடியாம அழுதப்போ, ‘நீ ஏதாச்சும் தப்பு பண்ணியிருப்ப, அதான் அவர் அடிச்சிருப் பார்’னு சொன்னாங்க.
படிப்பு வரலைனா, முரட்டுத்தனமா அடிச்சார் எங்கப்பா. அதுக்கு ஒரு கைத்தொழில் கத்துக்கவோ, மில் வேலைக்கோ, வீட்டு வேலைக்கோகூட என்னை அவர் அனுப்பி இருக்கலாம்.
பெற்றோர்களுக்கு நான் சில வார்த்தைகள் சொல்லணும். என்னதான் குடும்பக் கஷ்டம், பிரச்னைகள், இரட்டை வேலைச் சுமைனாலும், உங்க பிள்ளைங்க சொல்றதைக் கேளுங்க. ஸ்கூல் பற்றி, ஃப்ரெண்ட்ஸ் பற்றி, டியூஷன் போயிட்டு வர்ற நேரங்கள் பற்றியெல்லாம் அவங்ககூட பேசுங்க.
ஒரு கவர்ச்சி நடிகை, எங்களுக்கு அட்வைஸ் பண்றதானு கோபப்படாதீங்க. நீங்க ஒரு அழகான உலகத்தில் இருக்கீங்க. ஆனா, அதுல அசிங்கமான ஆட்களும் இருக்காங்க என்பது உங்களுக்குத் தெரியாது.
ஒரு அசிங்கமான உலகம் பற்றி நல்லா தெரிஞ்சு வெச்சிருக்கிறதால அக்கறையோட சொல்றேன். அந்த வாத்தியார், வயசுப் பையன் எல்லாம், உங்க குழந்தைகளையும் சந்திக்க வாய்ப்பிருக்கு. பத்திரமா பார்த்துக்கோங்க!”
ஒரு குவளை தண்ணீர் குடித்துக்கொண்டார்.
”மீடியாவால் சீரழிந்த பொண்ணுன்னு கண்டிப்பா என்னைச் சொல்ல முடியாது. நான் இப்படி ஆனது முழுக்க குடும்பச் சூழலாலதான். யாரும் பெண்களை குறிவெச்சு இங்க காத்திருக்க மாட்டாங்க.
நடிக்கும் ஆசையில் வரும் பெண்கள், தப்பான இடைத்தரகர்களை நம்பிதான் ஏமாந்து போறாங்க. அதனால, நேரடியா படக்குழுவுல இருக்கிறவங்ககிட்ட வாய்ப்பு கேளுங்க. மீடியா, பெண்களை மரியாதையா நடத்தும் துறை!”
இடைவிடாமல் பேசிய ஷகிலாவுக்கு இப்போது வயது 38.
”என் பணத்துக்காக, என்னைக் காதலிக்கிறதா சொல்லி சிலர் ஏமாற்றியிருக்காங்க. நம்மை நேசிக்கும் ஒரு மனசு கிடைக்காதாங்கிற ஏக்கத்துல நானும் நம்பி ஏமாந்தேன். ஆனாலும் கல்யாணத்தின் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.
என்னைப் புரிஞ்சுக்கிட்ட ஒருத்தர் கிடைப்பார் என்ற நம்பிக்கையும் இருக்கு. இப்படி நான் சொல்றது சிலருக்குப் பேராசையா தெரியலாம். ஆனா, அவங்களுக்கு என் வலிகள் தெரியாது!”
பகிரப்படாத வலிகளும், வார்த்தைகளும் வழிகின்றன, ஷகிலாவிடம்!
தங்க மகள்!
ஷகிலா வீட்டில் அவருக்கு உதவியாக இருக்கிறார் தங்கம். இந்த தங்கம், பெண்ணாக மாற ஆசைப்பட்டு, அதற்கான அறுவை சிகிச்சை எடுக்கும் முயற்சியில் இருப்பவர். ”தங்கம் என் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த அன்னிக்கே, என்னை ‘மம்மி’னு கூப்பிட்டா.
எனக்குனு யாருமே இல்லாம இருந்த சமயத்துல, எங்கிட்ட வந்து சேர்ந்த அவளை நான் என் மகளா பார்க்கிறேன். அவ ஆசைப்பட்டானு கொஞ்ச நாளைக்கு முன்ன அவளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தினேன். இந்த அன்புதான், இப்போ எனக்கிருக்கும் ஒரே ஆறுதல்!”