மறைந்த பழம்பெறும் நடிகை மனோரமாவிற்கு அஞ்சலி செலுத்த வந்த முதல்வர் ஜெயலலிதாவை நடிகரும் ச.ம.க எம்.எல்.ஏவுமான சரத்குமார் சந்திக்க முயற்சி செய்தார்
ஆனால் ஜெயலலிதா அனுமதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. பழம்பெரும் நடிகை மனோரமா உடல் நலக்குறைவால் சனிக்கிழமையன்று இரவு காலமானார்.
அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். சிறுதாவூரில் பங்களாவில் இருந்த முதல்வர் ஜெயலலிதா, நேற்று பிற்பகலில் மனோரமா உடலுக்கு அஞ்சலி செலுத்த தி.நகர் வந்தார்.
மனோரமா இல்லத்துக்குள் ஜெயலலிதா கார் நுழைவதற்குள் அங்கிருந்தவர்கள் அனைவரையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். பின்னர் இல்லத்துக்குள் நுழைந்த ஜெயலலிதா கார், மனோரமா உடல் வைக்கப்பட்டிருந்த இடம் அருகில் சென்றது.
காரில் இருந்து இறங்கிய முதல்வர் ஜெயலலிதா, தனது தோழி சசிகலாவுடன் மனோரமா உடல் வைக்கப்பட்டிருந்த இடத்துக்குச் சென்றார். அப்போது, அருகில் நடிகர்கள் சரத்குமார், பிரபு இருந்தனர்.
ஆனால், மனோரமாவின் இறப்பு குறித்து பிரபுவிடம் விசாரித்தார் ஜெயலலிதா. அருகில் இருந்த சரத்குமாரை அவர் கண்டுகொள்ளவே இல்லை. இது சரத்குமாரை அப்செட் ஆக்கியது. மனோரமாவிற்கு அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்ட முதல்வரை சிலர் சந்திக்க முயன்றனர்.
ஆனால் அவரை பார்க்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனிடையே, ஜெயலலிதாவை சந்திக்க சரத்குமார் அவரது கார் அருகே சென்றார். ஆனால், ஜெயலலிதாவைச் சந்திக்க அதிகாரிகள் அனுமதியளிக்க மறுத்துவிட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சரத்குமார் அங்கிருந்து சென்றுவிட்டதாகத் தெரிகிறது. அதிமுக ஆதரவு நிலையில் இருக்கிறார் சரத்குமார். அரசின் திட்டங்களை பாராட்டி பேசி வருகிறார். ஆனாலும் நடிகர் சங்க விவகாரத்தில் ஆளும் அதிமுக அரசு சரத்குமாருக்கு ஆதரவாக இல்லை.
ஆளும்கட்சியில் உள்ள நடிகர்கள் தேர்தலில் போட்டியிடவும் தடைவிதிக்கப்பட்டது. இந்த நிலையில் சரத்குமாரை, ஜெயலலிதா சந்திக்காமல் சென்றது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.