திருச்சியில் நடிகர் சங்கத் தேர்தலுக்கு ஆதரவு கேட்கச் சென்ற விஷால் அணியினரிடம் நாடக நடிகர், நடிகை கண்ணீர் விட்டு அழுதனர். இதைப் பார்த்து கண் கலங்கிய விஷால்,
''அடுத்த மாதத்தில் இருந்து உங்களுக்கு மாதம் 5 ஆயிரம் வீடு தேடி வரும். நாங்க ஜெயித்தால் முதல் கையெழுத்து நலிந்த நாடக கலைஞருக்கான ஓய்வூதிய திட்டத்திற்குதான்'' என அதிரடியாக அறிவித்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் சரத்குமார்- ராதாரவி தலைமையிலான அணியும், விஷால்– நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிடுகின்றன. இரு அணியினரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதுடன் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொள்ளும் நிலை தொடர்ந்து வருகின்றது.
இந்நிலையில் பாண்டவர் அணியைச் சேர்ந்த நடிகர்கள், நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன், சாந்தனு, நடிகைகள் ரோகினி, குட்டி பத்மினி,
கோவை சரளா உள்ளிட்டோர் தமிழகம் முழுவதும் சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு நாடக நடிகர்களை சந்தித்து தங்களின் ஆதரவைத் திரட்டி வருகிறார்கள்.
நேற்று சேலம் சென்ற விஷால் அணியினர் இன்று திருச்சி ஜென்னிஸ் ஹோட்டலில் நாடக நடிகர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டனர். முன்னதாக இந்த அணியினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
முதலாவதாகப் பேசிய நடிகர் கருணாஸ், "தென்னந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறுவதை முதன் முறையாக தமிழகமே உற்றுப்பார்க்கிறது.
எதிரணியினர் சில சூழ்ச்சிகள் செய்து தேர்தலில் வெற்றி பெறலாம் என நினைக்கிறார்கள். மணப்பாறையைச் சேர்ந்த நாடக நடிகர் குடும்பத்திடம் ஒரு ஓட்டுக்கு 3 ஆயிரம் வீதம் 5 ஓட்டுக்கு 15 ஆயிரம் தருவதாக சொல்லியிருக்கிறார்கள்.
ஓட்டுக்கு பணம் என்ற சூழ்ச்சிக்கு யாரும் பலியாகி விடவேண்டாம். அதே பணத்தை மாதாமாதம் ஓய்வூதியமாக வழங்க உள்ளது நமது பாண்டவர் அணி. இதுமட்டுமல்லாமல் தபால் ஓட்டுக்களிலும் முறைகேடு செய்ய எதிரணியினர் முயற்சி செய்கிறார்கள்.
அதனால் இப்போதே தங்கள் அருகில் இருக்கும் தபால் நிலையத்திற்குச் சென்று தங்களுக்கு வரும் தபாலை யாருக்கும் கொடுக்காமல் பார்த்துக்கொண்டு, நாடக நடிகர்கள் ஓட்டுக்களை நேரடியாக பதிவு செய்யுங்கள்" என்றார்.
அடுத்து பேசிய நடிகர் கார்த்தி, "தேர்தல் பரபரப்பு சூடு பிடித்துவிட்டது. சட்டசபை தேர்தலைவிட மக்கள் நம்ம தேர்தலைதான் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்பதால் தபால் ஓட்டுக்களில் தவறு செய்ய முயற்சி நடக்கிறது. தேர்தலை தடுக்கும் செயல்பாடுகளும் நடக்கிறது.
எங்களுக்கு தேர்தலில் இருந்து விலகும் எண்ணம் இல்லை. தமிழகத்தில் 32 சங்கங்கள் இருக்கிறது. கூடவே பெப்சி அமைப்புக்கு 3 வருடத்துக்கு ஒருமுறை தேர்தல் நடக்கிறது.
அதுபோன்று நடிகர் சங்கத்திற்கும் தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடந்தால் சங்கம் உடைந்துவிடும் என்பதெல்லாம் மாயை" என்றார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு விஷால் பதில் அளித்தார். அப்போது, ''சரத்குமாருக்கும் உங்களுக்கும் உள்ள தனிப்பட்ட பிரச்னையால் ஏற்பட்டது
இந்த போட்டி என சிம்பு கூறியுள்ளாரே?" என்ற கேள்விக்குப் பதிலளித்த விஷால், ''சரத்குமாருக்கும் எனக்கும் எந்த சொந்த பிரச்னையும் இல்லை.
ஆனால் அவர் நடிகர் சங்கத் தலைவர். நான் நடிகர். சங்கத் தலைவர், உறுப்பினர் என்கிற முறையில் அவருக்கும் எனக்கும் பிரச்னை...
அவ்வளவுதான்! அவர் செய்த தவறுகளை எதிர்த்து கேள்வி கேட்டோம். இப்போது தேர்தல் வரை கொண்டுவந்துவிட்டுள்ளது. நலிவுற்ற கலைஞர்களுக்கு நல்லது செய்ய களத்தில் இருக்கிறோம்'' என்றார்.
''நட்சத்திர கிரிக்கெட்டில் கேப்டனாக இருந்ததுபோல நடிகர் சங்கத்திற்கும் கேப்டனாக நீங்கள் முயற்சிப்பதாக நடிகர் சிம்பு குற்றம் சாட்டியிருக்கிறாரே?'' என்கிற கேள்விக்குப் பதிலளித்த விஷால், ''தமிழ் திரையுலகில் ஒரே கேப்டன் விஜயகாந்த்தான். நான் அதற்கெல்லாம் ஆசைப்படவில்லை" என்றார்.
''நடிகர் பாக்யராஜ் கடந்த சில நாட்களுக்கு முன் உங்கள் அணியில் இருந்தார். அடுத்து ராதிகா, சிம்புவுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அவர் பேட்டியிலேயே என் மகன் சாந்தனுகூட என் பேச்சை கேட்க மாட்டேன் என்கிறார்.
அப்படியானால் நடிகர் சங்க பிரச்னையால் குடும்பங்கள் இரண்டாகி விட்டதா? பாக்யராஜ் ஓரணியிலும், அவரது மகன் சாந்தனு ஓரணியிலும் இருக்கிறார்களே...'' என்ற கேள்விக்கு, நடிகர் சாந்தனு பதில் அளித்தார்.
"அப்பா நடிகர் சங்கத்தில் பிரச்னை அதிகமாகுதேன்னு கவலைப்பட்டு சமரசம் ஏற்படுத்ததான் அங்கு போனார். ஆனால் அங்கு நடந்ததை எல்லோரும் கவனிச்சிருப்பீங்க.
அந்த மேடையில் சிம்பு கூறிய சில கருத்துக்கள் தவறானவைன்னு அப்பா அப்பவே சிம்புகிட்ட சொன்னார். இப்போதுகூட மதுரைக்கு போகிறேன் என்றதும் அப்பா என்னை அனுப்பி வைத்தார். எங்கள் குடும்பத்தில் பிரச்னையில்லை. நீங்கள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்'' என்றார்.
தொடர்ந்து நாடக நடிகர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய கார்த்தியின் பேச்சு மிக யதார்த்தமாக இருந்தது. ''நாங்க படிக்காமல் நடிக்க வரல, படிச்சிட்டு வந்திருக்கோம்.
மாற்றம் வேணும்னு முடிவு செய்து தேர்தலில் குதித்திருக்கிறோம். இதோ என்னுடைய வயதில் ராதாரவி பொறுப்புக்கு வந்தபோது மூத்த கலைஞர்கள் வழிவிட்டாங்க. ஆனால், அவர் அதை செய்ய மறுக்கிறார்.
தமிழகத்தில் எத்தனை சங்க உறுப்பினர்கள் இருக்கிறார்கள் பட்டியல் கொடுங்கன்னு கேட்டால் ஹீரோயின் வயது தெரிஞ்சிடும்னு பட்டியல் கொடுக்கல. நான் பார்த்து வளர்ந்த கட்டடம் நடிகர் சங்க கட்டடம் இடிச்சி போட்டிருக்காங்க.
அதை கட்டியே தீருவோம். நிச்சயம் மாற்றத்தை நாங்கள் கொண்டு வருவோம். நலிந்த நாடக கலைஞர்கள் வாழ்வில் ஒளியேற்றாமல் விடமாட்டோம். இந்த படை ஜெயிக்கும் ஜெயிக்கணும்" என்று முடித்தார்.
அப்போது நாடக நடிகை சரண்யா என்பவர், தனக்கு மார்பக புற்று நோய் வந்ததாகவும் சென்னை அடையாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனக்கு உதவி செய்ய சரத்குமார், ராதாரவியிடம் கேட்டோம். ஆனால் அவர்கள் எனக்கு 2500 கொடுத்தாங்க.
அதுவும் 5 ஆயிரம் கொடுத்ததாக கணக்கு காட்டியிருக்கிறார்கள். ஆனால் இந்த அணிதான் எனக்கு 2 லட்ச ரூபாய் செலவில் அரசாங்கம் மூலம் மருத்துவ பரிசோதனை முடிக்க உதவி செய்திருக்காங்க'' என்றார்.
கூடவே ஜெகநாதன் எனும் மூத்த நாடக சங்க உறுப்பினர், ''என்னால நடக்க முடியாம கஷ்டப்படுகிறேன். மறைந்த நடிகர் மனோகரன் உள்ளிட்டோரோடு நடித்தவன் நான். மேலும் ராதாரவியோடு நடிச்சிருக்கிறேன். 40 வருடம் சென்னையில் இருந்து நடித்தேன்.
இப்போ முடியாமல் திருச்சிக்கு வந்துட்டேன். எனக்கு காலில் பிரச்னை. சரிசெய்ய சங்கத்தில் உதவி கேட்டேன். ஆனால் ராதாரவி உனக்கு பிரச்னையா என கேட்டு அனுப்பிவிட்டார்'' என சொல்லும்போது கண்ணீர் விட்டு அழுதார்.
இதைப் பார்த்து கலங்கிய விஷால், ''அடுத்த மாதத்தில் இருந்து உங்களுக்கு மாதம் 5 ஆயிரம் வீடு தேடி வரும். நாங்க ஜெயித்தால் முதல் கையெழுத்து நலிந்த நாடக கலைஞருக்கான ஓய்வூதிய திட்டத்திற்குதான்'' என முடித்தார்.
- சி.ஆனந்தகுமார்