பிஹார் அமைச்சர் அவதேஷ் குஷ்வாஹா லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியானதைத் தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பிஹார் நகர வளர்ச்சித்துறை அமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த அவதேஷ் குஷ்வாஹா பதவி வகித்து வந்தார்.
அவர் சில நபர்களிடம் இருந்து லஞ்சம் வாங்குவது போன்ற காட்சிகளை 'ஜெய்ஹிந்த் பிஹார்' என்ற அமைப்பு ஞாயிற்றுக்கிழமை யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்து கசியவிட்டது.
"பிஹார் தேர்தலில் வென்று ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் ஆட்சியமைத்தால் சில காரியங்களை நிறைவேற்றித் தருவதாக அமைச்சர் உறுதியளிக்கிறார்' என்ற வாக்கியம் மட்டும் காட்சியின் பின்னணியில் ஒலிக்கிறது. ஆனால் அமைச்சர் பேச்சு தெளிவானதாக அதில் இல்லை.
வீடியோ பரவியதை அடுத்து, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுமாறு முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டதாகவும், அதை ஏற்று அவர் ராஜினாமா செய்ததாகவும் ஐக்கிய ஜனதா தள வட்டாரங்கள் தெரிவித்தன.
ராஜினாமா செய்வதற்கு முன் தனியார் தொலைக்காட்சிக்கு குஷ்வாஹா அளித்த பேட்டியில், "இந்த விடியோ பதிவு எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியாது. என்னை பாஜக குறிவைத்துள்ளது மட்டும் உறுதியாக உள்ளது.
நான் லஞ்சம் வாங்குவதாக சித்தரிக்கும் வீடியோ காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து முதல்வரை தொடர்புகொண்டு பேசினேன். அதைத் தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்து விட்டேன்.'' என்றார்.
இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் சரத் யாதவ் கூறுகையில், "குஷ்வாஹாவிடம் இருந்து பதவி விலகல் கடிதம் பெறப்பட்டுள்ளது. அது ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது'' என்றார்.
பிஹார் சட்டப்பேரவைக்கு முதல் கட்டமாக 49 தொகுதிகளுக்கு இன்று (திங்கள்கிழமை) காலை 7.10 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இந்தத் தருணத்தில் பிஹார் அமைச்சர் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள பிப்ரா தொகுதியின் வேட்பாளராக குஷ்வாஹாவை ஐக்கிய ஜனதா தளம் அறிவித்திருந்தது. தற்போது எழுந்துள்ள லஞ்சப் புகாரை அடுத்து அவருக்குப் பதிலாக மற்றொரு வேட்பாளரை நிறுத்த கட்சி பரிசீலித்து வருகிறது.