நடிகர் சங்க கட்டிடம் தொடர்பாக ஒப்பந்தம் போட்டபோது, பொதுக் குழுவை கூட்டி முடிவெடுத்தவர்கள், அதை ரத்து செய்யும்போது பொதுக்குழுவை கூட்டாதது ஏன் என்று சரத்குமாருக்கு நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் நாசர் தலைமையிலான ‘பாண்டவர் அணி’ வெற்றி பெற்றது.
தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத் தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
24 செயற்குழு உறுப்பினர்களுக்கு நடந்த தேர்தலில் பாண்டவர் அணியைச் சேர்ந்த 20 பேரும் சரத்குமார் அணியில் 4 பேரும் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை தேர்தல் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் வழங்கினார். இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள், நடிகர் சங்க இடத்தை நேற்று பார்வையிட்டனர்.
பின்னர், நிருபர் களிடம் விஷால் கூறியதாவது: எம்ஜிஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர். உள்ளிட்ட புகழ் பெற்ற கலைஞர் களால் உருவாக்கப் பட்டு, பெருமையை பெற்றுத்தந்த இந்த மண்ணுக்காகத்தான் இவ்வளவு நாட்கள் கஷ்டப்பட் டோம்.
நடிகர் சங்கத்தை அனைத்து அமைப்புகளுக்கும் முன்னுதாரணமான சங்கமாக மாற்றிக்காட்டுவது எங்கள் கடமை. நலிந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் பெற்றுத் தருவதே எங்கள் முதல் வேலை. நாடக நடிகர்களின் நிலையை பார்க்கும் போது கண் கலங்குகிறது.
அவர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களின் விவரங்கள் அடங்கிய புதிய இணைய தளம் தொடங்கப்படும். இது அவர்களுக்கு பெரிய அடையா ளத்தை ஏற்படுத்தும்.
இளம் அணியினர் சேர்ந்து இந்த வெற்றியை கொடுத்திருக் கிறார்கள். இங்கே கட்டப்பட விருக்கும் புதிய கட்டிடம்தான் என் விலாசம். பொறுப்புடன் எங்கள் பணியை தொடருவோம்.
நடிகர் சங்க கட்டிடத்துக்கான ஒப்பந்தம் போட்டபோது பொதுக் குழுவை கூட்டி முடிவு எடுத் ததாக முன்னாள் தலைவர் (சரத்குமார்) தெரிவித்திருந்தார்.
ஆனால், இன்றைக்கு (நேற்று) பத்திரிகையாளர்களிடம், தேர் தலுக்கு முன்பே புதிய கட்டிடத் துக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார். இது புதிய தகவலாக இருக்கிறது.
ஒப்பந்தத்தை ரத்து செய்யும்போது பொதுக்குழுவை கூட்டி முடிவெடுக்காதது ஏன் என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்துவிட்டு முடிவு எடுப்போம். இவ்வாறு விஷால் கூறினார்.
நாசர் கூறும்போது, ‘‘இந்திய அளவில் நாடகக் கலை வளர வேண்டும். அதற்கான பயிற்சி கொடுக்கப்படும். நாடக நடிகர்களுக்கு உதவி செய்து அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டுவருவது நடிகர் சங்கத்தின் முக்கிய பணி யாக இருக்கும்’’ என்றார்.
செயற்குழு உறுப்பினர் பூச்சி முருகன் கூறும்போது, ‘‘பொதுக்குழு, செயற்குழுவை கூட்டி தீர்மானம் போட்டுதான் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியும். தன்னிச்சையாக ரத்து செய்ய முடியாது’’ என்றார்.
சச்சுவுக்கு உறுப்பினர் அட்டை
பழம்பெரும் நடிகை சச்சுவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவரால் தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை. திட்டமிட்டே தனது பெயரை நீக்கி விட்டதாக சச்சு குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், புதிய நிர்வாகி களாக வெற்றி பெற்ற நாசர், விஷால் உள்ளிட்டவர்கள் சச்சுவுக்கு வாழ்நாள் உறுப்பினர் அட்டையை நேற்று வழங்கினர். முன்னதாக நடிகர் சங்க அலுவலகத்துக்கு வந்த புதிய நிர்வாகிகளுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.