ஐரோப்பாவின் மிக பெரிய பள்ளிவாசல்களில் ஒன்று கடந்த புதன்கிழமை ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 10,000 நபர்கள் தொழுகை நடத்த கூடிய அளவு வசதி கொண்ட இப்பள்ளிவாசல் கடந்த பத்து வருடங்களாக கட்டப்பட்டு வந்தது. இந்த பள்ளிவாசல் 20,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.
சுமார் 170 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் (17 கோடி அமெரிக்கா டொலர்கள்) செலவில் கட்டப்பட்டுள்ள இப்பள்ளிவாசல் ஐரோப்பாவில் உள்ள மிக பெரிய பள்ளிவாசல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
ரஷ்யாவில் பெருகி வரும் முஸ்லிம்களின் தேவை கருதி கட்டப்பட்டுள்ள இப்பள்ளிவாசல், முழுக்க முழுக்க மக்கள் வழங்கிய நன்கொடையை கொண்டு கட்டப்பட்டுள்ளது.
மொஸ்கோவில் மாத்திரம் சுமார் 20 இலட்ச முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். . இஸ்லாம் ரஷ்யாவின் இரண்டாவது மிக பெரிய சமயம் ஆகும்.
மொத்தம் 2 கோடி 30 இலட்சம் முஸ்லிம்கள் ரஷ்யாவில் வாழ்ந்து வருகின்றனர். . இந்த பள்ளிவாசல் ஹஜ் பெருநாளை முன்னிட்டு கடந்த புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
ஆரம்ப வைபவத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாமிடிர் புட்டின், துருக்கி ஜனாதிபதி ரேசெப் தய்யிப் ஏர்தோகன், பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.