நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம். கல்புர்கி ஆகியோர் கொல்லப்பட்டதையும், தாத்ரியில் மாட்டுக்கறி உண்டதாகச் சொல்லி ஒருவரைக் கொன்றதையும் கண்டிக்கும் விதமாய் எழுத்தாளர் நயன்தாரா சேகல் தனக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதைத் திரும்ப அளிக்க முடிவெடுத்துள்ளார்.
இதன் மூலம் பிரதமர் மற்றும் மத்திய அரசின் மீதான தன் கண்டனங்களைத் தெரிவிக்க விரும்புகிறார். ஏற்கெனவே இதுபோல் நடந்துள்ளது. சார்த்தர் தனக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசை மறுத்தார்.
நோபல் பரிசு என்பது அரசியல்ரீதியாக முடிவு செய்யப்படுகிற ஒன்று. அமெரிக்காவின் சரவதேச உறவுநிலைகள்தான் ஒவ்வொரு வருடமும் யாருக்கு அது வழங்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன. ஆனால், சாகித்ய அகாடமி விருது அப்படி அல்ல.
அரசு நேரடியாக அவ்விருதின் தேர்வில் தலையிடுவதில்லை. தமிழை எடுத்துக்கொண்டால் காங்கிரஸ் ஆட்சியிலும் சரி… இப்போதும் சரி, இடதுசாரிகளின் செல்வாக்குதான் சாகித்ய அகாடமியில் வலுவாக உள்ளது.
அதற்காக இடதுசாரிப் படைப்பாளிகள்தான் தேர்வாகிறார்கள் என்றில்லை. நாஞ்சில் நாடன் நல்ல உதாரணம். அதனால், சாகித்ய அகாடமி விருதை ஒருவர் அரசின் நிலைப்பாட்டைக் கண்டிக்கும் வண்ணம் திருப்பி அளிப்பது அபத்தமான, பொருத்தமற்ற செயல்.
ஆனால், இதற்கு ஒரு குறியீட்டுத்தனமான முக்கியத்து வம் உள்ளதுதான். ஒரு எழுத்தாளர் தேசிய விருதைத் திரும்ப அளிக்கும்போது அவர் பேசும் பிரச்சினை ஊடகங்களில் சட்டென கவனம் பெறுகிறது.
சேகலைத் தொடர்ந்து பிற எழுத்தாளர்களும் தம் விருதுகளைத் திரும்பக் கொடுக்கலாமா? சேகலுக்கும் பிற மாநில, வட்டார எழுத்தாளர்களுக்கும் வர்க்க ரீதியான முக்கிய வேறுபாடு உண்டு. சேகல் ஒரு எலைட்டிஸ்ட்.
ஆங்கிலத்தில் நாவல் எழுதுபவர். அவர் நேருவின் மகளின் மகள். பெரும் பணக்காரர். ஆனால், மாநில மொழி எழுத்தாளர்கள் பலரின் நிலை பரிதாபமானது. நான் இவ்வருடம் ஷில்லாங்கில் யுவபுரஸ்கார் விருது வாங்குவதற்குச் சென்றிருந்தபோது, பிற மாநில எழுத்தாளர்களைச் சந்தித்தேன்.
எல்லாரும் மத்திய வர்க்கம். எழுதி எந்தக் கவனமும் கிடைக்காதவர்கள். சாகித்ய அகாடமி தரும் சிறு வெளிச்சமும் பணமும் அவர்களுக்கு முக்கியம். விருது சரி, பணத்தையும் திரும்பக் கொடுப்பதென்றால் அவர்கள் எங்கு போவார்கள்?
அந்த நிகழ்வில் ஒரே ஒரு எழுத்தாளர் மட்டும்தான் பங்கு பெறவில்லை. அவர் ஆங்கில நாவலுக்காகப் பரிசு பெற்ற கௌஷிக் பாரு. அவர் வெளிநாட்டில் ஏதோ வேலையாக இருந்ததால் தன் அம்மாவை அனுப்பியிருந்தார்.
பொதுவாக, ஆங்கில இந்திய எழுத்தாளர்களுக்கு இது போன்ற விருதுகளெல்லாம் இரண்டாம்பட்சம்தான். ஆனால், மாநில மொழி எழுத்தாளர்கள் அந்த அளவுக்கு வசதி இல்லாதவர்கள்.
ஐந்து பக்கெட் தண்ணீர்
துணிச்சலாகச் செயல்பட ஒன்று உங்களிடம் ஒன்றுமே இருக்கக் கூடாது. அல்லது நீங்கள் பணக்காரராக இருக்க வேண்டும். ஆங்கில இந்திய எழுத்தாளர்களைப் போலன்றி நம் மாநில மொழி எழுத்தாளர்கள் மத்திய வர்க்கத்தினர்.
அவர்களின் முதல் கவலையே இன்று ஐந்து பக்கெட் தண்ணீர் கிடைக்குமா என்பதாகத்தான் இருக்கும். அவர்களால் செய்ய முடிவதென்ன? அவர்கள் சமூக அநீதிக்கு எதிராகத் தொடர்ந்து எழுதலாம், மீடியாவில் பேசலாம், நேரடியான போராட்டங்களில் கலந்துகொள்ளலாம்.
நயன்தாரா சேகலின் தர்க்கத்தின்படியே யோசித்தால் இந்த அரசாங்கம் நமக்கு வழங்கும் மின்சாரம், தண்ணீர், பொதுப் போக்குவரத்து, தொலைத்தொடர்பு வசதி எனப் பல விஷயங்களை நாம் கைவிட வேண்டிவரும். அரசுச் சாலை களில் நடக்கக் கூடாது. அரசு மானியங்களை வாங்கக் கூடாது என்று இதை நீட்டித்துக்கொண்டே போகலாம்.
சேகலின் முடிவின் முக்கியமான தர்க்கப் பிழை, அவர் நரேந்திர மோடியையும் அரசு எந்திரத்தையும் ஒன்றென நினைத்துக் குழப்பிக்கொள்வதுதான். மோடியை எதிர்த்துப் போராட அவர் டெல்லியின் தெருக்களில் நடக்கும் இடதுசாரிப் போராட்டங்களில் கலந்துகொள்ளலாம். எழுதலாம்.
கூட்டங்களில் பேசலாம். இது போன்ற போராட்டங்களை நடத்தும் குழுக்களுக்குத் தன் சொத்தில் ஒரு சிறு பகுதியைக் கொடுக்கலாம். சுதந்திரப் போராட்டத்தின்போது பெரும் முதலாளிகள் தம் சொத்துக்களை காந்திக்கு அளித்திருக்கிறார்கள்.
இன்னொரு சந்தேகம். அமெரிக்க ஏகாதிபத் தியத்தை எதிர்க்கிற ஒருவர் கோக் குடிக்கலாமா? அமெரிக்க பிராண்ட் சட்டைகள், ஜீன்ஸ் அணியலாமா? ஹாலிவுட் படங்கள் பார்க்கலாமா? ஜெயலலிதாவை எதிர்க்கிறவர்கள் அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய் இட்லி சாப்பிடலாமா?
- ஆர். அபிலாஷ், யுவபுரஸ்கார் விருதுபெற்ற எழுத்தாளர்.