பெங்களூருவில் ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் தனது உடலில் இந்துக் கடவுளின் உருவப்படத்தை பச்சை குத்தி இருந்ததாக எழுந்த சர்ச்சை குறித்து அந்நாட்டு தூதரகம் கவலை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள ஆஸ்திரேலிய துணைத் தூதரக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். நேற்று (திங்கள்கிழமை) டெல்லியில் உள்ள ஆஸ்திரேலிய துணை தூதரகத்தின் மக்கள் தொடர்புத் துறை சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், "பெங்களூருவில் ஆஸ்திரேலிய இளைஞர் தனது உடலில் இந்துக் கடவுளின் உருவப்படத்தை பச்சை குத்தி இருந்ததால் அச்சுறுத்தப்பட்டது கவலை அளிக்கிறது.
வெளிநாடுகளுக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள் அந்தந்த நாட்டின் கலாச்சாரம் குறித்து சிறிதளவேனும் அறிந்துவைத்திருப்பதுடன் உள்ளூர்வாசிகளின் சம்பிரதாயங்களை மதித்து நடப்பது நல்லது" எனத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பாதுகாப்பு கருதி மெல்போர்ன் இளைஞர் மேத்யு கார்டனும் அவரது தோழியும் பெங்களூருவில் இருந்து வெளியேறினர்.
நேற்று பிற்பகல் வரை பத்திரிகையாளர்களுடன் தொடர்பில் இருந்த கார்டனும் அவரது தோழியும் அதன்பின்னர் அவர்களது செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டதாக அவர்களது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
பிப்ரவரி மாதம் வரை இந்தியாவில் தங்கியிருந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் கார்டனின் நண்பர்கள் கூறினர்.
மன்னிப்பு கோர வற்புறுத்தல்:
முன்னதாக தி இந்து ஆங்கில நாளிதழுக்கு மேத்யூ கார்டன் அளித்த பேட்டியில், "பெங்களூரு அசோக் நகர் போலீஸார் மன்னிப்புக் கடிதம் எழுதித்தருமாறு என்னை நிர்பந்தித்தனர்.
எனது தோழி கலக்கத்துடன் காணப்பட்டதால் வேறு வழியின்றி நான் மன்னிப்புக் கடிதம் அளித்தேன்" எனக் கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
சென்னை தூதரகம் விசாரணை:
இதற்கிடையில் இச்சம்பவம் குறித்து சென்னையில் உள்ள ஆஸ்திரேலிய துணைத் தூதரக அதிகாரிகள் பெங்களூரு அசோக் நகர் போலீஸாரை தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றதாகத் தெரிகிறது.
மேலும், ஆஸ்திரேலிய இளைஞர் மேத்யூவையும் அவரது தோழியையும் சென்னை தூதரக அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பு கொண்டுவருவதாகத் தெரிகிறது.
விசாரணைக்கு உத்தரவு:
பெங்களூரு காவல்துறை இச்சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. பெங்களூரு (மத்திய பகுதி) போலீஸ் துணை கமிஷனர் சந்தீப் பாட்டீல், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
சேஷாத்ரிபுரம் துணை காவல் ஆணையர் தலைமையில் விசாரணை நடைபெறுகிறது. ஆஸ்திரேலிய இளைஞரிடம் மன்னிப்புக் கடிதம் கோரிய காவலர் யார் என விசாரிக்கப்பட்டு வருகிறது.