அருண் விஜய் நடித்த ’தடையற தாக்க’ படத்தின் மூலம் தமிழில் அறிமுக மானவர் ராகுல் ப்ரீத் சிங். அதன் பிறகு ’என்னமோ ஏதோ’ படத்தில் கெளதம் கார்த்திக் ஜோடியாக நடித்தார். தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகை யாக வலம் வருகிறார்.
இவர், தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள ‘புரூஸ்லீ 2’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. ‘புரூஸ்லீ 2’ படத்தின் தமிழ் பதிப்புக்கான பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.
இதில், இயக்குநர்கள் கெளதம் வாசுதேவ் மேனன், விஷ்ணுவர்தன், ராகவா லாரன்ஸ், மோகன் ராஜா, தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜா, ஆர்.பி.சவுத்ரி, படத்தின் கதாநாயகி ராகுல் பிரீத் சிங் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் ராகுல் பிரீத் சிங், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“தமிழ் படங்களில் ஏற்கனவே நடித்துள்ளேன். தற்போது கொஞ்சம் இடைவெளி விழுந்துள்ளது. மீண்டும் தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.
‘புரூஸ்லீ 2’ படம் தமிழ், தெலுங்கில் வெளிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தெலுங்கு படஉலகில் நான் முதல் இடத்தை பிடித்துவிட்டதாக பேசுகிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லா துறைகளிலும் போட்டி உள்ளது.
அதுபோல், சினிமாவிலும் நடிகைகளுக்குள் போட்டி இருப்பது சகஜம்தான். தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட கதாநாயகர்களுடன் ஜோடியாக நடிக்க ஆசை உள்ளது. பேய் படங்கள் இப்போது நன்றாக ஓடுகின்றன.
நிறைய கதாநாயகிகள் பேய் வேடங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். எனக்கும் பேய் படத்தில் நடிக்க ஆசை உள்ளது. நான் மது அருந்துவதுபோல் ஒரு படத்தில் நடித்தேன். ஆனால், எனக்கு நிஜத்தில் குடிப்பழக்கம் கிடையாது.
பெண்கள் மது அருந்துவது சரியா, தவறா? என்று என்னிடம் கேட்கின்றனர். ஆண்களுக்கு, பெண்கள் சமமானவர்கள். பெண்கள் சரக்கடித்தால் என்ன தப்பு..? எதிலும் ஒரு எல்லை இருக்கவேண்டும். கட்டுப்பாடுகளை மீறுவது சிக்கலை ஏற்படுத்தும்.
ஆண்கள் குடித்துவிட்டு ரோட்டில் கலாட்டா செய்வது தவறு. பொதுமக்கள் திட்டுவார்கள். எனவே, எல்லாமே அளவோடு இருந்தால், தவறு இல்லை. “பெண்கள் மது அருந்துவது, அவரவர் சொந்த விருப்பம்”. இவ்வாறு அவர் கூறினார்.