வங்கித்துறையில் அதிகரிக்கும் போட்டி!

இப்போதைக்கு பரபரப்பாக இருப்பது வங்கித்துறைதான். வங்கித்துறையை பற்றி நல்லதாகவும், கெட்டதாகவும் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. 

 

முதலாவதாக பொதுத்துறை வங்கிகளில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தங் களது பங்குகளை குறைத்துக்கொண்டே வருகிறார்கள். இப்போது மட்டுமல்லாமல் கடந்த சில காலாண்டுகளாகவே தொடர்ந்து தங்களது முதலீட்டை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகின்றன. 

எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வங்கிகளில் அந்நிய நிறுவன முதலீடு குறைவது கவனிக்கத்தக்கது. அடுத்ததாக, இரண்டு புதிய வங்கிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு, அவை இரண்டும் செயல்பட தொடங்கிவிட்டன. 

அதேபோல சிறிய வங்கிகள் மற்றும் பேமெண்ட் வங்கிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் 18 மாதங்களில் வங்கித்துறை பெரும் மாற்றங்களை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. 

இந்த நிலையில் போட்டியை சமாளிக்க வங்கிகள் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்து வருகின்றன. ஆனால் அடுத்த கட்ட நடவடிக்கையே டிசிபி வங்கிக்கு எதிராக மாறி, பெரும் சிக்கலை உருவாக்கி விட்டது. 

டெவலப்மென்ட் கிரெடிட் பேங்க் என்று முன்பு அழைக்கப்பட்ட வங்கி இப்போது டிசிபி வங்கியாக மாற்றப்பட்டது. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு 160 கிளைகள் உள்ளன. கடந்த புதன்கிழமை, இந்த வங்கியின் காலாண்டு முடிவுகள் வெளியானது. 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வங்கியின் தலைவர் நசீர் முன்ஜி, போட்டிகளை சமாளிக்க இன்னும் ஒருவருடத்தில் வங்கி கிளைகளின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்துவோம் என்று கூறினார். 

முன்னதாக ஒரு வருடத்துக்கு 25-30 கிளைகள் வரை விரிவுபடுத்த திட்டமிட்டிருந்த நிலையில் ஒரே வருடத்தில் 100க்கும் மேற்பட்ட கிளைகள் திறப்பது என்ற முடிவினால், பங்குச்சந்தை வல்லுநர்கள் அந்த பங்கின் மீதான வருமானம் குறையும் என்று கருத்து தெரிவித்தார்கள். 

பல புரோக்கரேஜ் நிறுவனங்கள் பங்கின் இலக்கு விலையை குறைத்ததால் இரு நாட்களில் டிசிபி பங்குகளின் விலை 30 சதவீத அளவுக்கு சரிந்தது. 

இதனால் பதறிப்போன நிர்வாகம் ஒருவருடத்துக்குள் வங்கி கிளைகளை இருமடங்காக உயர்த்தும் திட்டத்தை இரு வருடத்துக்கு நீட்டிப்பு செய்தது. இதனால் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் இந்த பங்கு 4.12 சதவீதம் உயர்ந்து 95.95 ரூபாயில் முடிந்தது. 

முதலீட்டாளர்கள் மற்றும் பங்குச்சந்தை வல்லுநர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து விரிவாக்கப் பணிகளை மெதுவாக மேற்கொள்ளும் என்று அறிவித்தாலும் சில புரோக்கரேஜ் நிறுவனங்கள், இந்த பங்கு இன்னும் விலை குறையும் என்று கணித்திருக்கின்றன. 

ஒரு பக்கம் வங்கித்துறையில் உள்ள போட்டியை சமாளித்தாக வேண்டும் அப்போதுதான் நீண்ட காலத்துக்கு சந்தையில் இருக்க முடியும். அதே நேரத்தில் முதலீட்டாளர்களுக்கு சரியான லாபத்தையும் கொடுக்க வேண்டும். 

டிசிபி வங்கியின் நிலைமை தெரிந்துவிட்டது. மற்ற வங்கிகள் போட்டியை எப்படி எதிர்கொள்ள போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
Tags:
Privacy and cookie settings