உத்தரபிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கொல்லப்பட்ட இக்லாக்கின் மூத்த மகன், இந்திய விமானப்படையில் பணியாற்றி வருகிறார்.
நாட்டுக்காக போராடி வரும் ஒரு ராணுவ வீரரின் தந்தையைதான் மாட்டிறைச்சிக்காக ஒரு கும்பல் நடுரோட்டில் அடித்துக் கொன்றுள்ளது. உத்தர பிரதேச மாநிலம்.
கவுதமபுத்தர் மாவட்டத்தில் தாத்ரி அருகேயுள்ள பிசோதா என்ற கிராமத்தில், மாட்டிறைச்சி வைத்திருந்தாக இக்லாக் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கடந்த திங்கட்கிழமை நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொலை செய்யப்பட்ட இஸ்லாக்கின் குடும்பத்துக்கு உத்தரபிரதேச மாநில அரசு, 10 லட்ச ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்த அவரது மகன் டானிஷின் சிகிச்சைக்காக 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 இளைஞர்களை நேற்று உத்தர பிரதேச காவல்துறையினர் கைது செய்தனர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 3 நாட்களுக்கு ஆடு மற்றும் எருதுகளை குர்பானி கொடுத்து பங்கிடுவது வழக்கமாக உள்ளது.
உத்தரபிரதேசத்தில் பசுவை கொல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பசுவை குர்பானி கொடுத்ததாகவும், அதன் இறைச்சியை இக்லாக் பிரிஜ்ஜில் வைத்து சாப்பிட்டு வருவதாகவும் பிசோதா கிராமத்தில் வதந்தி பரவியது.
இதனைத் தொடர்ந்து அந்த கிராமத்தில் உள்ள காளி கோயில் மைக்கில் அறிவிப்பாக வெளியிட்டு, மக்களை திரட்டி இக்லாக்கின் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆனால் இக்லாக் வீட்டில் இருந்தது ஆட்டின் இறைச்சியே என்றும், தங்களுக்கு வேண்டாத சிலர் வதந்தி கிளப்பியதாகவும் அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து இக்லாக்கின் தாயார் அஸ்கரி கூறுகையில், '' திங்கள் கிழமை இரவு எங்கள் வீட்டு முன் ஒரு கும்பல் கூடியது. எங்களைப் பார்த்து கடுமையாக திட்டியது.
வாக்குவாதம் முற்றி தாக்குதல்களில் ஈடுபடத் தொடங்கினர். எனது மகனை உயிர் போகும் வரை அடித்துக் கொண்டே இருந்தனர். எனது பேரன், பேத்தி மற்றும் மருமகளையும் விட்டு வைக்கவில்லை.
கடந்த 70 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் வசித்து வருகிறேன். இந்து குழந்தைகளுடன்தான் எனது குழந்தைகளும் வளர்ந்தது. ஏழை இந்துக்களுடன் உணவை பங்கிட்டு சாப்பிட்டுள்ளோம்.
உயிருக்கு உயிராய் பழகியவர்கள் கூட அந்த சமயத்தில் உதவிக்கு வரவில்லை. எனது மகன் என் கண் முன்னே உயிழந்தான். எனது பேரன் மருத்துவமனையில் உயிருக்கு போராடுகிறான். எல்லாவற்றையும் இழந்து விட்டேன்'' என்கிறார் கதறியவாறு.
இக்லாக்கின் மூத்த மகன் சர்தாஜ், இந்திய விமானப்படையில் சென்னையில் பணியாற்றி வருகிறார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அவர், நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு சொந்த கிராமம் சென்றடைந்தார்.