இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், முதல் வேலையாக தென்னிந்திய நடிகர்கள் சங்கம் என்பதை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்றுங்கள் என்று ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
நடிகர் சங்கத் தேர்தலில் காலையிலேயே வாக்களித்த ரஜினிகாந்த், நடிகர் சங்கத்தினருக்கு சில அறிவுரைகளை வழங்கினார். ரஜினியின் முழுப் பேச்சு: அனைவருக்கும் வணக்கம். நடிகர்கள் ஒரே குடும்பம், ஒரே இனம், ஒரே ஜாதி...
தேர்தலில் யார் வென்றாலும் தோற்றாலும் நமக்குள் ஒற்றுமை முக்கியம். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். கடந்த சில தினங்களாக சில வாக்குவாதங்கள் நடந்துவிட்டன. சரி, நடந்தது நடந்துவிட்டது.
அதுக்காக நமக்குள் ஒற்றுமை இல்லை என ஊடகங்கள் நினைத்துவிடக் கூடாது. ஒரு போட்டி வந்துவிட்டது. வெரிகுட். யாரு ஜெயிச்சாலும் அவர்களுக்கு எனது வாழ்த்துகள். யாரு ஜெயிச்சாலும் அவர்களுக்கு இரண்டு வேண்டுகோள்.
முதல் வேண்டுகோள், யாரு ஜெயிச்சி வந்தாலும் முதலில் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் என்ற பேரை எடுத்துவிட்டு, தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என்று மாற்றிவிடுங்கள். அடுத்து, இந்தத் தேர்தலில் நல்லா சிந்திச்சு, ஆயிரம் முறை யோசிச்சி வாக்குறுதிகள் கொடுத்திருப்பீர்கள்.
ஜெயிச்சி வந்தவங்க, உயிரே போனாலும் சரி அந்த வாக்குறுதிகளை நிறைவேத்தனும். அப்டி நிறைவேத்த முடியாமபப் போனா உடனே ராஜினாமா செஞ்சிடுங்க. அது உங்க மனசுக்கும் நிம்மதி. உங்களுக்கும் நற்பெயரைக் கொடுக்கும். நல்ல எடுத்துக் காட்டாகவும் இருப்பீங்க.