நடிகை 'ஆச்சி' மனோரமா காலமானார்.. உடல் தகனம் செய்யப்பட்டது!

பழம்பெரும் நடிகை மனோரமா நேற்றிரவு மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 78. அவரது உடல் மைலாப்பூரில் தகனம் செய்யப்பட்டது. மறைந்த மனோரமாவின் உடல் மைலாப்பூரில் உள்ள கைலாசபுரம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 
அவரது உடலுக்கு அவரது மகன் பூபதி இறுதி சடங்குகளைச் செய்தார். முன்னதாகவே, கடந்த சில மாதங்களாகவே மனோரமா உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.

பின்னர் உடல்நலம் தேறி வீட்டில் ஒய்வெடுத்து வந்தார். சமீபத்தில் நடந்த சினிமா பத்திரிகையாளர் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில் நேற்றிரவு 11 மணியளவில் அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. 

உடனே அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 11:30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு, அவருடைய உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 78. மனோரமாவின் மறைவால் திரையுலகினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். 

அவரது உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. இவரது மறைவுக்கு முன்னணி நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பலரும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள். 

 

மனோராமாவின் வாழ்க்கை வரலாறு
 
சென்னை தியாகராய நகரில் உள்ள நீலகண்ட மேத்தா தெருவில் வசித்து வந்தார் மனோரமா. அவருக்கு திருமணமாகி பூபதி என்ற ஒரே மகன் மட்டும் உள்ளார். 

தமிழ் திரையுலகத்தில் மூத்த பழம்பெரும் நடிகை மனோரமா. திரையுலகினர் அனைவருமே அவரை 'ஆச்சி' மனோரமா என்று அன்புடன் அழைத்து வந்தார். இவர் திருவாரூரில் உள்ள மன்னார்குடியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் கோபி சாந்தா. இவரது பெற்றோர் காசி உடையார் மற்றும் ராமாமிர்தம். 

முதலில் சில நாடக கம்பெனிகளில் நடித்து படிப்படியாக வளர்ந்து திரையுலகில் அடியெடுத்து வைத்தார். 1958ம் ஆண்டு 'மாலையிட்ட மங்கை' படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் திரையுலகில் இவருடன் நடிக்காத நடிகர்களே இல்லை என்று கூறலாம். 

சந்திரபாபு, சோ, நாகேஷ், கவுண்டமணி உள்ளிட்ட பலருடன் நடித்திருக்கிறார். அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். என்.டி.ராமராவ், ஜெயலலிதா ஆகிய 5 முதல் அமைச்சர்களுடனும் பணியாற்றிய பெருமை படைத்தவர் மனோரமா. 

 

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், சிங்களம் ஆகிய 6 மொழிகளில் 1,300க்கும் மேற்பட்ட சினிமா படங்களில் நடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர் மனோரமா. 5,000க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும், ஏராளமான டி.வி தொடர்களிலும் நடித்துள்ளார். 

‘பள்ளத்தூர் பாப்பா’ என்றும், ‘ஆச்சி’ என்றும், ‘பொம்பளை சிவாஜி’ என்றும் அன்புடன் அழைக்கப்பட்டார். தமிழ்த் திரையுலகில் எம்.ஜி.ஆர்.-சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்.-ஜெய்சங்கர், ரஜினி-கமல், விஜய்-அஜீத், சூர்யா என 5 தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 

நகைச்சுவை வேடம் மட்டுமன்றி, குணசித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். பல பாடல்களையும் பாடியிருக்கிறார். பத்மஸ்ரீ, கலைமாமணி, கலைவாணர் விருது, எம்.ஜி.ஆர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருக்கிறார். 
Tags:
Privacy and cookie settings