நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க தனது பெயர் இல்லை என மூத்த நடிகை சச்சு புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சென்னையில் இன்று நடந்து வருகிறது.
இதில், நடிகர், நடிகைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், பழம்பெரும் நடிகைகளுள் ஒருவரான நடிகை சச்சு தனது பெயர் வாக்களிப்போர் பட்டியலில் இல்லை என பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பதற்காக வந்து தனது பெயரைக் காணாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய சச்சு, செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், "எனது அக்கா மாடி லட்சுமி நடிகர் சங்கத்தின் ஆரம்ப கால உறுப்பினர்.
எம்.ஜி.ஆருடன் நடித்தவர் அவர். நானும் பல காலமாக ஆயுள் கால உறுப்பினராக இருக்கிறேன். கடந்த 2007ம் ஆண்டு ரூ. 5000 கட்டி எனது உறுப்பினர் அட்டையை 10 வருடத்திற்கு புதுப்பித்தேன். 2017 வரை உறுப்பினர் அட்டை உண்டு. ஆனால் நான் கட்டிய 5000 ரூபாயை வரவு வைக்கவே இல்லை.
அப்போது சரத்குமார்தான் தலைவராக இருந்தார். எனது உறுப்பினர் அட்டையை புதுப்பிகாமல் விட்டுள்ளனர். இதை நான் சும்மா விட மாட்டேன். கோர்ட்டுக்குப் போவேன். எனக்கு நியாயம் கிடைக்கும் வரை ஓய மாட்டேன்" என்றார்.
நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியினரின் தேர்தல் அறிக்கையை நடிகர் சிவகுமார் தேர்தல் அறிக்கையை வெளியிட, பழம்பெரும் நடிகை சச்சு மற்றும் மதுரையை சேர்ந்த நாடக நடிகை வசந்தா ஆகியோர் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது