மாட்டிறைச்சி விருந்த அளித்த சுயேச்சை எம்.எல்.ஏ. ஷேக் அப்துல் ரசீதை பாஜக எம்.எல்.ஏ.க்கள் தாக்கியதால் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் கடும் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டது.
ஜம்மு - காஷ்மீரில் மாட்டினங்களை இறைச்சிக்காக வதை செய்வது மற்றும் கொல்வதை ரண்பிர் தண்டனைச் சட்டம் (ஆர்பிசி) பிரிவுகள் 298-ஏ, 298-பி ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கக் கோரி வழக்கறிஞர் பரிமோக் ஷ்ஷேத் என்பவர் பொது நல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரிந்த மாநில உயர் நீதிமன்ற ஜம்மு கிளை, "மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்ததோடு, அவ்வாறு விற்பனை செய்யப்படாததை உறுதிப்படுத்தவும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் காவல் துறைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை தற்காலிகமாக இரண்டு மாத காலம் தளர்த்தி உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இதனையடுத்து சுயேச்சை எம்.எல்.ஏ. ஷேக் அப்துல் ரசீது ஸ்ரீநகரில் நேற்று (புதன்கிழமை) எம்.எல்.ஏ.க்களுக்கான தங்கும் விடுதியில் மாட்டிறைச்சி விருந்து அளித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், "யாரையும் வேதனைப்படுத்த வேண்டும் என்பதற்காக இத்தகைய விருந்து நிகழ்ச்சிக்கு நான் ஏற்பாடு செய்யவில்லை.
நீதிமன்றமோ, சட்டமன்றோ ஒரு தனி மனிதன் எத்தகைய உணவை உட்கொள்ள வேண்டும் எனக் கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்த்தவே இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்தேன். மத உணர்வுகளை நீதிமன்றமோ, சட்டமன்றமோ கட்டுப்படுத்த முடியாது" என்றார்.
விருந்து நிகழ்ச்சியைத் தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) சட்டப்பேரவைக்கு வந்த ஷேக் ரசீதை அவையில் இருந்த பாஜக எம்.எல்.ஏ.க்கள் சூழ்ந்து கொண்டு தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனைக் கண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ரசீதுக்கு ஆதரவாக களத்தில் இறங்கினர். இதனால், சட்டப்பேரவை களேபரக் கூடமானது. இதனால் அங்கு கடும் பரபரப்பு நிலவியது.